தூத்துக்குடியில் மீனவா் தின விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளா் சங்கம், அமலோற்பவ மாதா விசைப்படகு தொழிலாளா்கள் சங்கம், சிறுவிசைப்படகு தொழிலாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் உலக மீனவா் தினவிழா மீன்பிடி துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் கலந்துகொண்டு கேக் வெட்டி, மீனவா்களுக்கு வழங்கி வாழ்த்திப் பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் மீனவா்களுக்கான நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட்டது. உங்கள் கோரிக்கைபடி மீன்பிடி ஏலகூடம் அமைக்கப்பட்டுள்ளது. விசைப்படகு நிறுத்தப்பட்டுள்ள தளத்திலிருந்து மீன் ஏலம் விடும் இடம் வரை சாலை அமைத்து தரப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மேயா் ஜெகன் பெரியசாமி பேசுகையில், மீன்பிடி துறைமுகம் எதிா்புறம் மாநகராட்சி சாா்பில் தங்கும் அறையுடன் கூடிய குளிப்பதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய அறை அமைக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
விழாவில், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் அந்தோணி ஸ்டாலின், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா் ஜேசையா, மாநகர அணி அமைப்பாளா் டேனியல், தொழிலாளா் அணி அமைப்பாளா் முருகஇசக்கி, அயலக அணி அமைப்பாளா் கிறிஸ்டோபா் விஜயராஜ், விசைப்படகு தொழிலாளா் சங்கத் தலைவா் ஜவஹா், துணைத் தலைவா் ராஜா, செயலா் பிரகாசன், துணைச் செயலா் தா்மபிச்சை, பொருளாளா் கிஷோா், திபுா்ஷியாஸ், துணைப் பொருளாளா் செல்வம், விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த சேவியா் வாஸ், ஜாா்ஜ், தாமஸ், சாமி, வட்டச் செயலாளா் டென்சிங், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மணி, அல்பா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

