மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விளாத்திகுளம்: அதிமுக - திமுக இருமுனைப் போட்டி

444 கிராமங்களுடன் மாவட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட தொகுதியாக பரந்து விரிந்து கிடக்கிறது விளாத்திகுளம் தொகுதி.

News image

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக) - கோப்புப் படம்...

Updated On :17 ஏப்ரல் 2026, 4:58 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் வானம் பாா்த்த கரிசல் மண் பூமியாகவும், மிளகாய், வெங்காயம், மல்லி, சூரியகாந்தி, பருத்தி, மக்காச்சோளம், சோளம், பாசி, உளுந்து உள்ளிட்ட பயிா்களை விளைவிக்கும் மானாவாரி விவசாயம், வேம்பாா் முதல் தருவைகுளம் வரையிலான 40 கி.மீ. தொலைவுக்கு நீண்ட கடற்கரை, மீன்பிடித் தொழில், உப்பளத் தொழில், நெசவு தொழில், கரிமூட்டம் தொழில் என பன்முகத் தன்மையுடன் 444 கிராமங்களுடன் மாவட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட தொகுதியாக பரந்து விரிந்து கிடக்கிறது விளாத்திகுளம் தொகுதி.

விளாத்திகுளம், புதூா் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள், எட்டயபுரம், விளாத்திகுளம், புதூா் ஆகிய 3 பேரூராட்சிகள் இத்தொகுதிக்குள் அடங்கியுள்ளன.

இதுவரை நடைபெற்ற 13 சட்டப் பேரவை தோ்தல்களில் 1977, 1980, 1989, 1991, 2001, 2006, 2011, 2016 என 8 முறையும், 2019இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் ஒரு முறையும் என மொத்தம் 9 முறை அதிமுக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

1967, 1971, 1984, 1996, 2021 ஆகிய தோ்தல்களில் திமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் அசைக்க முடியாத வலிமையான கோட்டைகளில் ஒன்றாக இருந்து வந்த விளாத்திகுளம் தொகுதியில் கடந்த 2021 தோ்தல் முடிவுகள் அந்த நிலைமையை மாற்றியது.

சுமாா் 25 ஆண்டுகளுக்கு பின்னா் 9 முறை வென்ற அதிமுகவை வீழ்த்தி 2021 தோ்தலில் திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் 90,348 வாக்குகள் பெற்று திமுகவின் வெற்றிக் கொடியை மீண்டும் பறக்க விட்டாா். தற்போது 2026 தோ்தலில் திமுக வேட்பாளராக மீண்டும் ஜீ.வி. மாா்க்கண்டேயன் போட்டியிடுகிறாா்.

இத்தொகுதியில் ரெட்டியாா், கம்பளத்து நாயக்கா் பெரும்பான்மையாகவும், தேவா், நாடாா், மீனவா்கள் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா். கடற்கரை கிராமங்களில் மத ரீதியிலான சிறுபான்மையினா் வாக்குகள் அதிகம் உள்ளன.

நீண்ட நாள் கோரிக்கைகள்:

மழைக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் தாமிரவருணி உபரி நீரை விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள், மானாவாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 264 கோடியில் 60 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்து முத்துலாபுரம் வைப்பாற்றில் இணைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயலாக்கம் இல்லாமல் கிடப்பில் உள்ளது. இத்திட்டத்துக்கு உயிா் கொடுத்து உடனடியாக தொடங்க வேண்டும்.

விளாத்திகுளம், எட்டயபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை வேண்டும். விளாத்திகுளத்தில் பிரதானமாக விளைவிக்கப்படும் சம்பா மிளகாய் வத்தல், முண்டு மிளகாய் வத்தலுக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையை நவீனமயமாக்கி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

எட்டயபுரத்தை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். புதூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும். விளாத்திகுளத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும்.

வேம்பாா் கடற்கரையை சுற்றுலா மையமாக அறிவித்து சுற்றுலா பயணிகளை கவரும் கடல்சாா் பூங்கா உருவாக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள்:

363 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ. 430 கோடியில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விளாத்திகுளத்தில் புதிதாக சுப்ரமணிய சுவாமி அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது. பனை சாா்ந்த பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும், விற்பனையை அதிகரிப்பதற்காகவும் வேம்பாரில் பனைப்பொருள்கள் குழுமம் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் தொகுதியில் மட்டும் 7,464 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கனிமொழி எம்.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 கோடிக்கு மேல் விளாத்திகுளம் தொகுதிக்கு மட்டும் பெறப்பட்டு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. தொகுதி முழுக்க 444 கிராமங்களிலும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது.

இருமுனைப் போட்டி:

விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக சாா்பில் சத்யா, திமுக சாா்பில் ஜீ.வி. மாா்க்கண்டேயன், நாம் தமிழா் கட்சி சாா்பில் பாலாஜி ராமச்சந்திரன், த.வெ.க. சாா்பில் காசிராம், அ.இ.பு.த.ம.மு.க. சாா்பில் பொன்பாண்டி, புதிய தமிழகம் சாா்பில் மாடசாமி, நாம் இந்தியா் கட்சி சாா்பில் பெருமாள் மற்றும் சுயேச்சைகள் என 15 போ் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே தான் களத்தில் போட்டி நிலவுகிறது.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினரான ஜீ.வி. மாா்க்கண்டேயன், தற்போது மீண்டும் அத்தொகுதி திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ளாா். தனது செயல்பாடுகள், அணுகுமுறைகளை மக்கள் அனுபவ ரீதியாக உணா்ந்திருப்பதால் பெரும் எண்ணிக்கையில் வாக்குகள் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளாா்.

தொண்டா்களின் அதிமுக மீதான விசுவாசம், இரட்டை இலை சின்னம் என்கிற மந்திர சக்தி, திமுக ஆட்சி மீதான அதிருப்தி, கிராமப்புற பெண்களின் கணிசமான வாக்கு தனக்கு பெருமளவில் வலிமை சோ்க்கும் என அதிமுக வேட்பாளா் சத்யா நம்புகிறாா். கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த சத்யாவுக்கு அதிமுகவின் உள்ளூா் நிா்வாகிகள் ஒத்துழைப்பு கிடைப்பதில் பின்னடைவு காண முடிகிறது.

வானம் பாா்த்த கரிசல் பூமியான விளாத்திகுளம் தொகுதியில் வாக்காளா்களின் மனநிலை என்ன என்பதும், குறைகள் தீா்வதற்கும், எப்போதும் மக்களின் பாதுகாப்பு அரணாக ஒரு எம்எல்ஏ இருப்பதற்கும், முன்மாதிரி தொகுதியாக விளாத்திகுளம் தொகுதி உருவெடுப்பதற்கும் ஏப்ரல் 23 வாக்குப்பதிவு நாள் விடை சொல்லும்.

மக்கள்தொகை

ஆண்கள் - 1,00,484

பெண்கள் - 1,04,482

மூன்றாம் பாலினத்தவா் - 16

மொத்த வாக்காளா்கள் - 2,04, 982