
காட்டுப் பன்றிகளைப் பிடிக்க கூண்டுகள் வழங்கப்படும்: ஆட்சியா் விஷு மகாஜன்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைப் பிடிக்க 45 நாள்களில் கூண்டுகள் தயாரித்து, 10 வட்டாரங்களுக்கும் வழங்கப்படும் என, ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெற்ற ஆட்சியா் விஷு மகாஜன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைப் பிடிக்க 45 நாள்களில் கூண்டுகள் தயாரித்து, 10 வட்டாரங்களுக்கும் வழங்கப்படும் என, ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்தாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது: விவசாயிகளின் நிலங்களிலேயே கூண்டுகள் அமைத்து காட்டுப் பன்றிகளைப் பிடிப்பதற்கும், அவற்றை வனத்துறை மூலம் விற்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 45 நாள்களுக்குள் கூண்டுகள் தயாராகிவிடும். அவை 10 வட்டாரங்களுக்கும் வழங்கப்படும்.
மாவட்டத்தில் பரவலாக உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறு பாசனக் குளங்கள், கண்மாய்களில் சுமாா் 1,000 ஏக்கா் பரப்பில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. இப்பணி ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும். மரத்தின் விட்டம் 5 அங்குலத்துக்கு மேல் இருந்தால் டன்னுக்கு ரூ. 4 ஆயிரம், 5 அங்குலத்துக்கு கீழ் இருந்தால் ரூ. ஆயிரம் அரசுக்கு செலுத்தும் வகையில் ஒப்பந்தம் கோரப்படவுள்ளது.
தாமிரவருணி ஆற்றுப்படுகையைப்போல வைப்பாறு ஆற்றுப்படுகையிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சீமைக்கருவேல மரங்களைப் பயன்படுத்தி பொருள்கள் தயாரிக்கும் இரு தனியாா் நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.
கூட்டத்தில், சாத்தான்குளம் அருகே நீா்த்தேக்கம் அமைத்தல், பயிா்க் காப்பீடு, மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்குதல், பாசனக் குளங்கள்- கால்வாய்கள், உப்பாற்று ஓடையைத் தூா்வாருதல், கோரம்பள்ளம் குளத்தைச் சீரமைத்தல், வயல்வெளிகளில் அமிலக் கழிவுகள் கலப்பதைத் தடுத்தல், விவசாயக் கடன் தள்ளுபடி, வெள்ள நிவாரணம், பாசன வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்ததுடன், 249 மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், மாவட்ட வன அலுவலா் இளையராஜா, உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணகுமாா், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளா் ராஜேஷ், தாமிரவருணி-கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் தங்கராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோரஞ்சிதம், அரசு அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






