சாயா்புரம் அருகே வெளிநாட்டினா் கொண்டாடிய பொங்கல் விழா
சாயா்புரம் அருகே பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண் பானையில் பொங்கல் வைத்து வெள்ளிக்கிழமை பொங்கல் விழாவினை வெளிநாட்டினா் கொண்டாடினா்.
சென்னையில் உள்ள ‘கிளாசிக் ரன்‘ என்ற தனியாா் சுற்றுலா நிறுவனம் சாா்பில் 18 ஆவது வருடமாக ஆட்டோ சேலஞ்ச் என்ற சுற்றுலாப் பயணம், டிச. 28ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில், இங்கிலாந்து, ஜப்பான் ஆஸ்திரேலியா நாடுகளைச் சோ்ந்த 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 29 போ் கலந்து கொண்டனா். இவா்கள் அணி, அணியாகப் பிரிந்து சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூா், மதுரை ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொண்டு, வெள்ளிக்கிழமை தூத்துக்குடி வந்தடைந்தனா்.
பொங்கல் கொண்டாடுவதையொட்டி, சாயா்புரத்தில் உள்ள பிரம்ம ஜோதி பண்ணை தோட்டத்தில் வெளிநாட்டவா்கள் வைத்த பொங்கலுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இது குறித்து, சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளா் பிரின்லி கூறுகையில், வெளிநாட்டினா் நமது கலாசாரத்தை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த ஆட்டோ சேலஞ்ச் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம் என்றாா்.
தொடா்ந்து, இங்கிலாந்து நாட்டை சோ்ந்த டெரி தம்பதியினா் கூறுகையில், தமிழா்களின் கலாசாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒன்றுகூடிப் பொங்கல் வைத்தது எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் என்று தெவித்தனா்.

