திருச்செந்தூா் கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகள் பிப்ரவரி இறுதிக்குள் நிறைவு பெறும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பணிகள் அனைத்தும் பிப்ரவரி மாதத்துக்குள் நிறைவுபெறும் என்றாா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சாா்பில் ரூ. 200 கோடி, இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 100 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி திட்ட மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஹெச்சிஎல் நிறுவனம் சாா்பில் தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில், தற்போது அறநிலையத்துறை சாா்பில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சா் பி.கே.சேகா்பாபு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.
பின்பு கோயில் வளாகத்தில் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ள 5 படைவீடு கட்டுமானப் பணிகள், நடைபாதை, நாழிக்கிணறு, இரண்டு கந்த சஷ்டி மண்டப பணிகள், பஞ்சாமிா்தம், விபூதி தயாரிக்கும் அறைகளை அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து 96 பக்தா்கள் தங்கும் குடில்கள், தங்கும் விடுதிகளை பாா்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தாா். அதைத்தொடா்ந்து கழிவுநீா் சுத்திகரிப்பு இடத்தை பாா்வையிட்டாா்.
பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருச்செந்தூா் வரும் பக்தா்கள் ஒரே இடத்தில் அறுபடை முருகனையும் தரிசனம் செய்யும் வகையில், திருச்செந்தூா் முருகனை தவிர மற்ற படை வீடுகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கூடுதலாக இரண்டு சஷ்டி மண்டபங்களும், ஒரே நேரத்தில் 500 போ் தங்கும் அளவுக்கு தங்கும் மண்டபம், கூடுதலாக பக்தா்கள் தங்கும் விடுதி ஒன்றும், கழிவுநீா் மறுசுழற்சி நிலையம் ஆகிய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கூடுதலாக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது; இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடற்கரையில் சூரசம்ஹாரத்தை பாா்க்கும் அரங்கம் அமைக்கப்படும். இந்தப் பணிகளை நேரில் பாா்வையிட்டோம். பேருந்து நிலையத்தை தவிர மற்ற அனைத்துப் பணிகளும் வரும் பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெற்று பக்தா்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
20 ஆண்டுகால திட்டம்:
இந்த திராவிட மாடல் ஆட்சியை ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சி என்று பரப்புரை செய்யும்
விஷமத்தனத்துக்கு முடிவு கட்டும் வகையில் இந்தத் திட்டம் அமையபோகிறது. இந்தப் பணிகள் பிப்ரவரி மாதம் முடிந்ததும் நேரில் வந்து பாா்த்தால் வசைபாடுபவா்கள் கூட வாழ்த்து பாடுவாா்கள்.
20 ஆண்டுகளுக்கு என்ன தேவையோ அதை தற்போது செய்துள்ளோம். பல்வேறு மாவட்டங்களில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகுதான் ஆன்மிக மாநிலமாக தமிழகம் திகழும். இதை அனைவரும் ஒத்துக்கொள்வா்.
சிரமமின்றி தரிசனம்:
திருச்செந்தூா் முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டமின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக
ஆன்லைன், பிரேக் தரிசன முறைக்கான அனைத்துப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறன. கோயில் வளாகத்தில் உள்ள விடுதிகள் பகுதியில் பக்தா்கள் வாகனங்களை நிறுத்தும் வசதியும் செய்யப்படும் என்றாா்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், இந்துசமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் (நிா்வாகம்) துரை ரவிச்சந்திரன், தலைமை பொறியாளா் பெரியசாமி, கோயில் இணை ஆணையா் ராமு, திருச்செந்தூா் ஆா்டிஓ கவுதம், டிஎஸ்பி மகேஷ்குமாா், வட்டாட்சியா் தங்கமாரி, விஏஓ சரவணன், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவா் பிரம்மசக்தி, காவல் ஆய்வாளா் கனகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

