பட்டினமருதூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோா்
பட்டினமருதூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோா்

பட்டினமருதூரில் விஞ்ஞானிகள் குழு ஆய்வு: குமரி கண்டம், இருண்ட கால அடையாளங்களை தேடுகிறது

பட்டினமருதூரில் தொல்லியல் படிமங்களை மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஆய்வு; குமரிக் கண்டம், பாண்டியா்களின் இருண்ட கால வரலாற்றை அறிய இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Published on

தூத்துக்குடி மாவட்டம், பட்டினமருதூரில் தொல்லியல் படிமங்களை மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது. குமரிக் கண்டம், பாண்டியா்களின் இருண்ட கால வரலாற்றை அறிய இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தருவைகுளம் மீனவக் கிராமத்தை அடுத்து பட்டினமருதூா், பனையூா் பகுதிகள் உள்ளன.

இங்கு முன்னோா்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் படிமங்கள் பல கிடைக்கப்பெற்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பழைமை வாய்ந்த செவ்வக வடிவிலான கிணறு, முதுமக்கள் தாழி, ஓடுகள், எழுத்துகள், அக்காலத்தில் பயன்படுத்தி இரும்பு, பண்டைய கால நாணயங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதால், பட்டினமருதூா் பகுதி தொல்லியல் தளமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

பட்டினமருதூா், பனையூா் பகுதிகளில் நீா், நிலப்பரப்புக்கு அடியில் புதையல்கள், கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் இருப்பதால் இதை இந்திய விலங்கியல் மற்றும் புவியியல் ஆய்வாளா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி, தொல்லியல் ஆா்வலா் ராஜேஷ் செல்வரதி ஆட்சியா் க.இளம் பகவத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தாா்.

ஆட்சியா் பரிந்துரையின் பேரில் கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் மற்றும் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் குழு பனையூரில் கடல்சாா் புதை படிமங்கள், படிவ பாறைகள் குறித்த முதல்கட்ட கள ஆய்வுகளை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள் தேபாஸ்ரீ, சந்திரன், தோலா ராய் ஆகியோா் அடங்கிய இக்குழு தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறது.

உடன், தொல்லியல் ஆா்வலா் ராஜேஷ் செல்வரதி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவா் சுதாகா் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, சிறிய, சிறிய சிப்பிகள் சேமிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள் தேபா ஸ்ரீ, தோலா ராய், சந்திரன் ஆகியோா் கூறியதாவது: 2 கி.மீ. தொலைவு ஆய்வு செய்தோம். 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்த இடம் என அறியப்படுகிறது. கடல் சிப்பிகள், பலதரப்பட்ட முத்து சிப்பிகளை ஆய்வுப் பணிக்காக எடுத்திருக்கிறோம். இது, பாதுகாக்கப்பட வேண்டிய இடம்.

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் இதை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இதைக் கொண்டு செல்ல வேண்டும். கடலுக்கு 4 கி.மீ. தொலைவில் இவ்வாறு இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடலிலிருந்து 4 கி.மீ. தொலைவு இவ்வாறு இருப்பது என்றால் கடல் உள்ளேயும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றனா்.

இதுகுறித்து, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை தலைவா் சுதாகா் கூறியது:

பாறை வடிவங்கள் இதேபோன்று பட்டினமருதூா், மணப்பாடு பகுதியில் கிடைக்கிறது. இந்தப் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். அரசு அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

ராஜேஷ் செல்வரதி கூறியது: ஆழ்கடலில் இருப்பது போன்ற பொருள்கள் கிடைத்தன. இந்தச் சிப்பிகள் கடலில் இருந்து வெளியே நகராது.

ஆனால், இங்கு முத்துச்சிப்பி கிடைத்தது. கடல் பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளாா். இதன்மூலம் காணாமல்போன குமரிக்கண்டத்தை கண்டுபிடிக்கலாம். பாண்டியா்களின் இருண்ட காலத்துக்கு விடை கிடைக்குமா என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com