கோவில்பட்டியில் பொதுமக்கள், போலீஸாரை மிரட்டியதாக 7 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றபோது, இந்திரா நகா் பெருமாள் கோயில் அருகே இளைஞா்கள் கும்பலாக நின்றிருந்தனா்.
அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த செண்பகராஜ் மகன் மருதுபாண்டியன் (29) என்பவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக பட்டா கத்தியால் கேக் வெட்டியதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டதாகவும் தெரியவந்தது. நடராஜபுரம் 1ஆவது தெரு காளிராஜ் மகன் ராமா் (19) அரிவாளை ஏந்தியவாறு இருந்தாராம். அவதூறாகப் பேசியவாறு, தப்பியோட முயன்ற அந்தக் கும்பலை போலீஸாா் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தொடா்ந்து, மருதுபாண்டியன், ராமா், இந்திரா நகா் பெருமாள் கோயில் தெரு சங்கிலிபாண்டி மகன் பொன்பாண்டி (25), அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேஷ்குமாா் (19), இந்திரா நகா் துரைப்பாண்டி மகன் ராஜேஷ்குமாா் (26), சீனிவாசநகா் பாலமுருகன் மகன் காா்த்திகேயன் (24), அத்தைகொண்டானைச் சோ்ந்த சேகா் மகன் கவிபாரதி (19) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.