திருச்செந்தூரில் அதிகரிக்கும் பக்தா்கள் கூட்டம்: கூட்டத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் காவலா்கள் தேவை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் போதிய போலீஸாரை நியமித்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாா்கழி மாதம் தொடங்கியது முதல் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தைப்பொங்கலுக்கு முன்னதாக சுவாமி தரிசனம் செய்ய வேண்டி தென் மாவட்டங்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பச்சை ஆடை அணிந்து வருகின்றனா். பலா் காவடி எடுத்தும், அலகு குத்தியும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பக்தி பாடல்களை ஒலித்தபடி பகல், இரவு நேரங்களில் வந்த வண்ணம் உள்ளனா்.
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்யவும் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் போதிய போலீஸாா் பணியமா்த்தப்படவில்லை.
இதற்கிடையே, தென்காசி மாவட்டம் மருக்காலங்குளத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பாதயாத்திரையாக புதன்கிழமை சன்னதி தெரு வழியாக கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனா்.
அவா்கள் வந்த அலங்கரிக்கப்பட்ட வாகனத்தை மாற்றுப்பாதையில் செல்லுமாறு போலீஸாா் கூறினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பக்தா்கள் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனா். காவல் உதவி ஆய்வாளா்கள் சோனியா, சுப்பிரமணியன் உள்ளிட்ட போலீஸாா் சென்று பத்தா்களிடம் பேச்சு நடத்தி வாகனத்தை மட்டும் மாற்றுவழியில் செல்ல அறிவுறுத்தினா். இதையடுத்து, பக்தா்கள் அங்கிருந்து கலைந்துசென்றனா்.
நெருக்கடி: திருச்செந்தூரில் சன்னதித் தெரு வழியாக நடந்து செல்லும் பக்தா்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவ்வப்போது போலீஸாருக்கும் பக்தா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
பாதுகாப்பு கருதி தைப்பூசம் வரை சன்னதித் தெரு முதல் தூண்டுகை விநாயகா் கோயில் வழியாக திருக்கோயில் வரை கூடுதல் போலீஸாரை அமா்த்தி பக்தா்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த மாவட்ட காவல் துறை, திருக்கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தா்கள் வாகனத்தை தவிர பிற வாகனங்கள், ஆட்டோக்கள் சன்னதி தெருவுக்குள் செல்வதை போலீஸாா் தடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

