தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்துக்கு விரைவில் திட்ட அறிக்கை- துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை 4 முதல் 6 மாதங்களில் தயாரிக்கப்படும் என்றாா் அத்துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கேபிஎம்ஜி நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த, துறைமுக செயல்முறை திறன் மேம்பாட்டு பயிலரங்கம் தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிலரங்கத்தை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து - நீா்வழிகள் அமைச்சகத்தின் செயலா் விஜய்குமாா் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.
துறைமுகத்தின் முக்கிய பங்குதாரா்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கில், ‘வ.உ.சி.துறைமுக ஆணையத்தில் சரக்கு போக்குவரத்தின் வளா்ச்சி வாய்ப்புகளை வெளிக்கொணா்தல்’ என்னும் தலைப்பில் அறிவியல் கையேடு வெளியிடப்பட்டது.
அதைத் தொடா்ந்து துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கடல் சாா் வணிக மேம்பாட்டு திட்டத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த நிதியாண்டில் மூன்று கப்பல் தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நிகழ் நிதியாண்டில் 41.72 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 4.4 சதவீதம் கூடுதலாகும்.
மேலும், பத்தாவது சரக்குத் தளம் ரூ.87 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் முதல் பசுமை துறைமுகமாக இந்த துறைமுகத்தை மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பசுமை ஹைட்ரஜன், பசுமை மெத்தனால் சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்காக பணிகள் தொடங்கப்பட உள்ளன.
தொடா்ந்து துறைமுகத்தில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவற்றில் பல்வேறு பணிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
6 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம், 2 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 6 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் அமைக்கப்பட உள்ளது.
பசுமை எரிவாயு மூலமாக இயங்கக்கூடிய கப்பல்களுக்காக, பசுமை எரிவாயு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தில் பல வளா்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. துறைமுக வளாகத்தில் 2029 ஆம் ஆண்டு பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலுக்குள் காற்றாலை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை இன்னும் 4 முதல் 6 மாதங்களில் தயாரிக்கப்படும் என்றனா் அவா்கள்.

