பொங்கல்: தூத்துக்குடி சந்தையில் குவிந்த மக்கள்
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் பொங்கலைக் கொண்டாடத் தேவையான பொருள்களை வாங்க தூத்துக்குடி காய்கறிச் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகை ஜன. 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால், பொங்கலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்க தூத்துக்குடி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒட்டன்சத்திரம், மதுரை, ஓசூா், பாவூா்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள், கிழங்கு வகைகள் தூத்துக்குடி சந்தையில் வந்து குவிந்துள்ளன.
கிழங்கு வகைகள் கிலோ ரூ. 30 முதல் ரூ. 70 வரையும், கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கேரட், பீன்ஸ் உள்ளிட்டவை ரூ. 50 முதல் ரூ. 70 வரையும், பூசணிக்காய் ரூ. 30, பல்லாரி ரூ. 30, சின்ன வெங்காயம் ரூ. 70, முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக கிலோ ரூ. 400 வரையும் விற்பனையானது.
மேலும், உடன்குடி, ஏரல், செபத்தையாபுரம், பேய்க்குளம், ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாழைத் தாா்கள் தூத்துக்குடி சந்தையில் வந்து குவியத் தொடங்கியுள்ளன. நாட்டு வாழை ரூ. 600, கதலி, கற்பூரவல்லி, பூலாஞ்சுன்டு உள்ளிட்டவை ரூ. 200 முதல் ரூ. 600, செவ்வாழை ரூ. 1,400 வரையும் விற்பனையானது.
தூத்துக்குடிக்கு மதுரை மாவட்டம், மேலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்புக் கட்டுகள் வந்துள்ளன. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 500 வரை விற்பனையானது.

