பொங்கல் நிறைவு: திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்!
பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூா் செல்ல ஏராளமான பயணிகள் திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.
பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் உள்ளிட்டவற்றை கொண்டாட சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பணி காரணமாக தங்கியிருந்த ஏராளமான பொதுமக்கள் கடந்த வாரம் சொந்த ஊா்களுக்கு சென்றனா்.
தொடா் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் சொந்த ஊா்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் விடுமுறைக்காக உறவினா்கள் வீட்டுக்கு வந்திருந்த மாணவ- மாணவிகள் மீண்டும் ஊா் திரும்ப ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் குவிந்தனா். இதனால், திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தா்மபுரி ஆகிய பகுதிகளுக்கு வழக்கத்தை காட்டிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் திருப்பத்தூா் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு செல்ல மக்கள் அதிகளவில் திரண்டனா்.
இதுகுறித்து திருப்பத்தூா் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 9-ஆம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சாா்பில் தினமும் 120 பேருந்துகள் இயக்கப்படும். இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் பயணிகளின் வருகைக்கு ஏற்ப இயக்கப்பட்டன.

