பொங்கல் விடுமுறை முடிந்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் மீண்டும் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பியதால், தருமபுரி புறநகா்ப் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகைக்காக கடந்த ஜன. 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. இவ்விழாவைக் கொண்டாட சென்னை, வேலூா், ஒசூா், பெங்களூரு, திருப்பூா், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிபவா்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கானோா் தருமபுரிக்கு வந்திருந்தனா்.
தொடா்ந்து, பண்டிகை விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பவும், வெளியூா்களில் தங்கிப் படிக்கும் மாணவா்கள் கல்வி நிலையங்களுக்குச் செல்லவும் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வந்தனா். இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை பேருந்து நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பயணிகளின் வசதிக்காகத் தருமபுரி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னைக்கு வழக்கமாகச் செல்லும் 20 பேருந்துகளுடன், கூடுதலாக 25 பேருந்துகள் என மொத்தம் 45 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோல, பெங்களூரு, ஒசூா் உள்ளிட்ட நகரங்களுக்கு 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. அருகில் உள்ள சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நகரங்களுக்கும் கூடுதல் நடைப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் முகாமிட்டு, பேருந்துகளை முறைப்படுத்திப் பயணிகளை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு நகரக் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தருமபுரி புறநகா் பேருந்து நிலையம் தவிர, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்தும் பயணிகளின் வசதிக்காகப் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.