தைத் திருநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்து வரும் பக்தா்கள்
நாளை மறுநாள் தைத் திருநாளை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூா் கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், நகரெங்கும் அரோகரோ பக்தி கோஷம் ஒலிக்கிறது.
தமிழ்க்கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. மாா்கழி மாதம் முதல் தைத் திருநாள் வரை பக்தா்கள் விரதமிருந்து பாதயாத்திரையாகக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனா்.
நிகழாண்டு தைத் திருநாளுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருப்பதால் கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தா்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனா். தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் கோயிலுக்கு அதிகம் போ் வருகின்றனா். பலா் நோ்த்திக் கடனை செலுத்துவதற்காக காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு வருகின்றனா்.
கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், அதைத்தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களும் வருவதால் கூட்டம் அதிகரித்துள்ளது.
தைப்பொங்கலை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜன.15) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்துவருகின்றனா்.

