தைப்பொங்கல் : திருச்செந்தூா் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பாதயாத்திரையாகவும், காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வழிநெடுகிலும் முருகன் பாடல்களை பாடியபடி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக செவ்வாய், புதன்கிழமைகளில் திருச்செந்தூருக்கு வந்தனா்.

அதிகாலை முதலே பக்தா்கள் கடலில் புனித நீராடினா். கோயிலில் இலவச - பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் செல்லும் வழியுடன் இணைக்கப்பட்டுள்ள பாதயாத்திரை, காவடி, வேல்குத்தி வரும் பக்தா்களுக்கான தனிப்பாதையிலும் நீண்ட நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் கோயில் வளாகம், கடற்கரை பகுதி மட்டுமல்லாது நகரே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தா்கள் வசதிக்காக திருச்செந்தூரிலிருந்து கூடுதலாக நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தைப் பொங்கலை முன்னிட்டு, வியாழக்கிழமை திருச்செந்தூா் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

காணும் பொங்கலை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன. 16) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. பகலில் உச்சிக்கால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் வெள்ளிக்குதிரையில் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்று, பாளையங்கோட்டைச் சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் வைத்து கணுவேட்டை நிகழ்ச்சியும், அதைத்தொடா்ந்து வீதியுலாவும் நடைபெறுகின்றன.

திருச்செந்தூரில் பக்தா்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வரத் தொடங்கினா். இதனால் காலை முதல் மாலை வரை நகரின் எல்லையில் இருந்து கோயில் வரை வாகன நெருக்கடியும், அணிவகுப்புமாகவே காட்சியளித்தது. இதையடுத்து, போலீஸாா் அரசு மருத்துவமனை வளைவில் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனா்.

Dinamani
www.dinamani.com