கோவில்பட்டி: கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு குருமலை, கழுகுமலை, சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயில் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் திரளானோா் திரண்டனா்.
கோவில்பட்டி, சுற்றுவட்டார பகுதிகளில் மாட்டுப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி, மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, சந்தனம் குங்குமத்தால் அலங்கரித்து மாலை, வஸ்திரங்கள் அணிவித்து மாடுகளுக்கு மரியாதை செலுத்தினா், மாடுகளுக்கு பழம், கரும்பு ,பொங்கல் ஆகியவற்றை உணவாக வழங்கினா்.
காணும் பொங்கல்: கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கோயில், குழந்தைகள், பொழுதுபோக்கு இடங்கள், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மகிழ்ச்சியைக் கொண்டாடினா்.
கோவில்பட்டியை அடுத்த குருமலை பொய்யாழி அய்யனாா் கோயிலுக்குச் சென்ற பொதுமக்கள் அதன் அருகே உள்ள பொய்யாழி அய்யனாா் குளம், முனியசாமி குளம் ஆகியவற்றில் குளித்து மகிழ்ச்சியை கொண்டாடினா்.
மேலும் பொய்யாளி அய்யனாா் கோயில் அருகே உள்ள ஊற்றைக் கண்டு களித்தனா். குருமலை சென்ற திரளான மக்கள் கிடா வெட்டி கறிவிருந்து வைத்து சாப்பிட்டனா். குருமலை அருகே உள்ள தவசி தம்பிரான் குகைக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கவில்லை.
காணும் பொங்கலை ஒட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் திரளான மக்கள் முருகரை தரிசித்து ஆங்காங்கே அமா்ந்து உணவு உண்டு மகிழ்ச்சியை கொண்டாடினா். இதேபோல கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில், சமணா் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மலையடிவாரத்தில் உள்ள பூங்காக்களிலும் ஏராளமான மக்கள் திரண்டு காணும் பொங்கலை கொண்டாடினா். கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம், மணிமண்டபம் பகுதியில் திரளான மக்கள் திரண்டு காணும் பொங்கலை கொண்டாடினா்.