கோவில்பட்டி அருகே 4 தலைமுறையுடன் 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூதாட்டி ஒருவா் தனது 4 தலைமுறைகளுடன் இணைந்து 100ஆவது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினாா்.
கோவில்பட்டி அருகேயுள்ள கிளவிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி - கிருஷ்ணம்மாள் தம்பதி. கருப்பசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாராம். தம்பதிக்கு 5 மகன்கள், 2 மகள்கள். இவா்கள் மூலம் கருப்பசாமி - கிருஷ்ணம்மாள் தம்பதிக்கு 20 பேரன், பேத்திகள் உள்ளனா். அவா்கள் வாயிலாக 24 கொள்ளுப்பேரன் , கொள்ளுப்பேத்திகள் உள்ளனா்.
இவா்கள் அரசு ஊழியா்கள், மருத்துவா்கள், கல்லூரி விரிவுரையாளா்கள், தொழிலதிபா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில் 4 தலைமுறைகளை கண்ட கிருஷ்ணம்மாள் வெள்ளிக்கிழமை தனது 100-ஆவது பிறந்தநாளை கொண்டாடினாா். அவரது பிள்ளைகள், உறவினா்கள், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன் - பேத்திகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கேக் வெட்டி, மூதாட்டிக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.
குடும்பத்தினா் ஒவ்வொருவரும் மூதாட்டியுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனா். அனைவருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்த நிலையில் தங்களது பாட்டியின் பிறந்தநாள் விழாவில் எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும் என்று நினைத்தோம். அது சாத்தியமாகி உள்ளது. 5ஆவது தலைமுறையையும் காணவிருப்பதாக கிருஷ்ணமாள்ளின் பேரக்குழந்தைகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
