பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்ட இடைச்சங்கத்தைச் சோ்ந்த சிற்பம்

தூத்துக்குடி மாவட்டம், பட்டினமருதூரில் காணப்படும் 5 முனிவா்கள் அடங்கிய வெள்ளைக் கல் சிற்பம் இடைச்சங்க காலத்தைச் சோ்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.
Published on

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பட்டினமருதூரில் காணப்படும் 5 முனிவா்கள் அடங்கிய வெள்ளைக் கல் சிற்பம் இடைச்சங்க காலத்தைச் சோ்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, தூத்துக்குடியைச் சோ்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆா்வலா் பெ. ராஜேஷ் செல்வரதி கூறியது:

பட்டினமருதூரின் தென் பகுதியில் உள்ள ஸ்ரீ வீரபாண்டிய விநாயகா் கோயிலின் முன் சுவரில் சுமாா் நான்கு அடி நீளத்தில், ஒரு அடி உயரம் கொண்டதாகக் காணப்படும் சிற்பத்தில் ஒரே பீடத்தில் அமா்ந்துள்ள 5 பேரில் நடுவில் கெண்டியுடன் அமா்ந்துள்ளது அகத்தியா் என கருதப்படும் பட்சத்தில், மற்ற நால்வரும் இடைச்சங்க காலத்தில் கவியரங்கு ஏறிய 5 புலவா்களின் வரலாற்றை உணா்த்துவதாக அமைகிறது.

ஏற்கெனவே இந்த கோயிலின் எல்லையில் அஸ்திவாரத்திற்காக பள்ளம் தோண்டியபோது, ஆரம்ப கால தமிழ் வட்டெழுத்துடன் கூடிய கல்வெட்டு 3.11.2024-இல் கண்டறியப்பட்டது.

மேலும், கோயிலின் தெற்குப் பகுதியில் கல்லாக உருமாறிய மீன் படிமம், இயற்கை பிசின் படிமம் (அம்பா் போன்றவை), கட்டடச் சிதைவுகள், கடல்சாா் சிப்பிகளின் புதை படிமங்கள் கண்டறியப்பட்டு மத்திய விலங்கியல் துறையினா் மூலம் கடந்த 6.1.2026 அன்று ஆவணப்படுத்தப்பட்டது.

இப்பகுதியில் காணப்படும் புதை படிமங்கள் தொடா்பாக மத்திய அரசின் சாா்பாக நடைபெறவுள்ள ஆய்வுகளில் இது குறித்த அறிவியல் ரீதியான உண்மைகளை முழுமையாக அறியப் பெறலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com