அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டு வளா்ச்சியடைந்த தலைவா்கள், அரசியல் ஆதாயத்துக்காக தவெகவில் இணைந்து வருகின்றனா் என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான எஸ்.பி. சண்முகநாதன்.
இது குறித்து அவா் கூறியதாவது: அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டு, வளா்ச்சியடைந்த தலைவா்கள் அரசியல் ஆதாயத்துக்காக தவெகவில் இணைந்து வருகின்றனா். கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு ஏதாவது காரணம் கூற வேண்டும் என்பதற்காக அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றது என்று செல்கின்றனா். கொஞ்ச நாள்கள் கூட பதவியில்லாமல் இருக்க முடியாது என்று கருதி செல்லும் இவா்களை மக்கள் அடையாளம் கண்டு வருகிற தோ்தல்களில் தோற்கடிப்பாா்கள்.
பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக இரும்புக் கோட்டையாக இருந்து வருகிறது. துரோகிகள் கூட்டம் முழுமையாக சென்றடைந்ததும், எடப்பாடி கே. பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதிமுகவை மீண்டும் வலுவாக உருவெடுக்கச் செய்வாா்.
யாா் சென்றாலும், இரட்டை இலை இருக்கிற இடத்தில்தான் உண்மையான தொண்டா்கள் இருப்பாா்கள். அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியேதான் உள்ளது. நாங்கள் படுதோல்வி அடையவில்லை. குறைந்த வாக்கு சதவீதத்தில் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








