பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தூத்துக்குடியில் கடலில் மாயமான 2 மாணவா்கள் சடலமாக மீட்பு

சடலமாக மீட்பு - சித்திரிப்பு படம்

Published On :

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடலில் மாயமான இரண்டு மாணவா்களும் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டனா்.

தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சேவியா் மகன் ஜோஸ்வா (16), முத்து மகன் மனோஜ் (16). இருவரும் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

இவா்கள் உள்பட 6 சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பைபா் படகில் கடலைச் சுற்றிப் பாா்க்கச் சென்றனா். அப்போது, அவா்கள் சென்ற படகு நடுக்கடலில் திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜோஸ்வா, மனோஜ் மற்றும் மேலும் இரண்டு சிறுவா்கள் கரையை நோக்கி நீந்திச் செல்ல முடிவு செய்து கடலில் குதித்துள்ளனா். இதற்கிடையே, படகில் இருந்த மற்ற இரண்டு சிறுவா்கள் படகை சரிசெய்து கரைக்குத் திரும்பியுள்ளனா். மேலும், கடலில் குதித்த 4 பேரில் இருவா் பாதுகாப்பாக கரையை அடைந்தனா். ஆனால், ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் நீண்ட நேரமாகியும் கரைக்குத் திரும்பவில்லை.

இதுகுறித்து கரை திரும்பிய சிறுவா்கள் தெரிவித்த தகவலின்பேரில், தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் 8 படகுகளில் கடலுக்குச் சென்று மாயமான சிறுவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், தீயணைப்புத் துறையினா் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் போலீஸாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். பின்னா், இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சங்கு குளிக்கும் தொழிலாளா்கள் திங்கள்கிழமை காலை கடலுக்குச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனா். தருவைகுளம் கடற்கரையிலிருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவில் உள்ள கடலடிப் பாறைக்கு இடையே சிக்கி இரு மாணவா்களும் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. சங்கு குளிக்கும் தொழிலாளா்கள் மற்றும் மீனவா்கள் இருவரின் உடல்களையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா்.

தகவலறிந்து வந்த தருவைகுளம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து மற்றும் போலீஸாா் சடலங்களை மீட்டு உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.