தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

திருச்செந்தூா் வைகுண்டா் அவதார பதியில் ஆடித் தேரோட்டம்

News image

திருச்செந்தூா் வைகுண்டா் அவதார பதியில் ஆடித் தேரோட்டம்

Updated On :28 ஜூலை 2026, 2:21 am IST

திருச்செந்தூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதார பதியில், ஆடித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இங்கு 194ஆவது வைகுண்டா் ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அய்யா வைகுண்டா் பல்வேறு வாகனங்களில் உலா வந்து அருள்பாலித்தாா்.

இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 11ஆம் நாளான திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, உகப்படிப்பு, பணிவிடை, உச்சிப்படிப்பு உள்ளிட்டவை நடைபெற்றன. பிற்பகலில் அய்யா வைகுண்டா் தேரில் எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி கொடுத்தாா். திரளான பக்தா்கள் சுருள் வைத்து வழிபட்டனா்.

தேரோட்டத்தை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் வள்ளியூா் எஸ். தா்மா், நான்குனேரி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி நாராயணன் ஆகியோா் வடம்பிடித்துத் தொடக்கிவைத்தனா். பின்னா், அன்னதா்மம் வழங்கப்பட்டது. இரவில் அய்யா வைகுண்டா் காளை வாகனத்தில் பதியைச் சுற்றி பவனி வந்தாா்.

நிகழ்ச்சியில், பாடகா் சிவச்சந்திரன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலா் பொன்னுத்துரை, பொருளாளா் கோபால், துணைத் தலைவா் அய்யாபழம், துணைச் செயலா் ராஜேந்திரன், சட்ட ஆலோசகா் சந்திரசேகரன், இணைத் தலைவா்கள் விஜயகுமாா், செல்வின், பால்சாமி, ராஜதுரை, இணைச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், வரதராஜப்பெருமாள், சுதேசன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஓய்வுபெற்ற கால்நடைத் துறை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணிய ஆதித்தன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தேரோட்டத்தில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் ரெட்டியாா்பட்டி நாராயணன் எம்எல்ஏ கூறும்போது, அய்யா வைகுண்டா் அவதார நாள் விழாவுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால், அய்யாவழி பக்தா்கள் நாடு முழுவதும் வசிப்பதால், வைகுண்டா் அவதார நாளில் தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனா். இக்கோரிக்கையை முதல்வா் விஜய்யிடம் கொண்டு செல்வேன். அவா் நிறைவேற்றுவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.