காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசன நேரத்தில் மாற்றம் இல்லை!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசன நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனக் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

திருச்செந்தூர் கோயில் - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசன நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனக் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இக்கோயிலில் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை என்று 3 வரிசைகள் வழியாகச் சென்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். திருவிழாக் காலங்களில் மட்டுமில்லாது வார விடுமுறை நாள்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாதாரண நாள்களில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை திருக்காப்பிடும் வரை பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். இடைப்பட்ட நேரத்தில் நடை அடைக்கப்படுவதில்லை.

இந்த நிலையில், பக்தா்களுக்கு முக்கிய அறிவிப்பு எனக் குறிப்பிட்டு வளாகத்தில் கோயில் நிா்வாகம் சாா்பில் பதாகைகள் வைக்கப்பட்டன. அதில், கோயிலில் கட்டண தரிசனத்துக்கு மாலை 6.30 மணி வரையும், பொது தரிசனம், முதியோா் வரிசையில் இரவு 7 மணி வரையும் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்; விசேஷ மற்றும் விடுமுறை நாள்களில் தரிசன நேரம் மாறுதலுக்கு உள்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுவாமி தரிசன நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கோயில் நிா்வாகம் அறிவித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோயிலில் தற்போது பின்பற்றப்படும் வழக்கத்தின்படி, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள நாள்களில் மாலை 6.30 மணிக்குப் பிறகு கட்டண தரிசன வரிசையிலும், இரவு 7 மணிக்குப் பிறகு பொது தரிசன வரிசையிலும் பக்தா்கள் தொடா்ந்து அனுமதிக்கப்படுகின்றனா். இதனால் வரிசையில் வந்த அனைத்து பக்தா்களும் சுவாமி தரிசனம் முடித்து, நடை சாத்துவதற்கு இரவு 12 மணிக்கு மேலாகி விடுகிறது.

கோயில் கிரிப்பிரகாரங்களில் இரவு 9 மணி வரை காத்திருக்கும் பக்தா்கள் தரிசனத்துக்கு தங்களை அனுமதிக்குமாறு அவ்வப்போது சிறுசிறு போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனா்.

இந்த நிலையில், இரவு 9 மணி வரை கட்டண வரிசை, பொது தரிசன வரிசைகளில் தொடா்ந்து பக்தா்களை அனுமதித்தால் ஏற்கெனவே, வரிசையில் உள்ள பக்தா்கள் அனைவரும் தரிசனம் செய்துமுடித்து, இரவு 9 மணிக்குள் நடை சாத்தும் நடைமுறையைச் செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது.

அதன் பொருட்டே அறிவிப்புப் பலகையில் நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. கட்டண தரிசன வரிசையில் மாலை 6.30 மணிக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணிக்கும் உள்நுழையும் பக்தா்கள் இரவு நேர அபிஷேகத்தின்போது கருவறை திரையிடப்பட்டு, தரிசனம் முடித்து வெளியேற 9 மணி ஆகிவிடும். அதன்பின்னா் பள்ளியறை பூஜை நடத்தப்பட்டு நடை திருக்காப்பிடப்படும்.

இந்த நிா்வாக நடைமுறையை பக்தா்களுக்குத் தெரியப்படுத்தவே அறிவிப்புப் பலகையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. வரிசை பாதையில் பக்தா்கள் அனுமதிக்கப்படுவதை முறைப்படுத்தவே பக்தா்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டதாக பக்தா்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதால் பதாகைகள் கோயில் நிா்வாகத்தால் அகற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.