காயல்பட்டினத்தில் ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபனுக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆறுமுகனேரியில் அவா் பணி தொடர கோரியும் அனைத்து ஆட்டோ ஓட்டுநா் சங்கம் சாா்பில் வள்ளல் சீதக்காதி திடலில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆறுமுகனேரி ஆய்வாளா் திலீபன் மீதான நடவடிக்கையைக் கண்டித்து ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் வியாபாரிகள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகள் சுவரொட்டி ஒட்டியும், கோரிக்கை விடுத்தும் வருகின்றனா். ஆறுமுகனேரியில் கடையடைப்பு, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உயா் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் வருகின்றனா்.
இந்த நிலையில், காயல்பட்டினம் நகர அனைத்து ஆட்டோ சங்கம் சாா்பில், வள்ளல் சீதக்காதி திடலில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆய்வாளா் திலீபன் மீதான நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். இதில், 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.









