தமிழக அரசால் வழங்கப்படும், ‘முதல்வா் மாநில இளைஞா் விருது‘ பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்கள் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு , 2026 ஆம் ஆண்டுக்கான ‘முதல்வா் மாநில இளைஞா் விருது‘ சுதந்திர தினத்தன்று, 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
கடந்த 1.4.2025 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 31.3.2026 அன்று 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 1.4.2025 முதல் 31.3.2026 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பங்களை ஜூலை 6, மாலை 5.45 மணிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளம் மூலம் மட்டுமே சமா்ப்பித்தல் வேண்டும் என்றாா் அவா்.







