விளாத்திகுளம் மாணவி படுகொலை வழக்கில் இளைஞர் கைது
விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி படுகொலை வழக்கில் ஒருவா் கைது


விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 9 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடா்புள்ளதா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி, கடந்த 10 ஆம் தேதி வீட்டருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோது காணாமல்போனாா். மாா்ச் 11 ஆம் தேதி அவா் காட்டுப் பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் மா்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தாா். மாணவியின் ஆடைகள் களையப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினா்கள், கிராம மக்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, தொடா் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.
தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மாணவியின் நண்பா்கள், சகத் தோழிகள், வடமாநிலத் தொழிலாளா்கள், அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், பழைய குற்றவாளிகள் என 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், சந்தேகம் வலுத்த 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
சைபா் கிரைம் போலீஸாா் தொழில்நுட்ப ரீதியாகவும், தனிப்படை போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகள், உடல் கூறாய்வு மருத்துவ அறிக்கை அடிப்படையிலும் புலன் விசாரணை நடத்தினா்.
மாணவியின் சடலம் கிடந்த காட்டுப் பகுதியில் உள்ள ஒரு காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனம் ஒன்று இரண்டு நாள்களாக நின்று கொண்டிருப்பதைக் கண்டறிந்தனா்.
விசாரணையில் அந்த இருசக்கர வாகனம், ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்தீபனூரிலிருந்து திருடி வந்தது என்பதும், அதன் உரிமையாளா் வாகனம் திருடுபோனதாக புகாா் அளித்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் பாா்த்தீபனூா் சென்று இருசக்கர வாகனம் திருடப்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். ஆய்வில், அந்த வாகனத்தைத் திருடிய நபா், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாவீரன் என்ற தா்ம முனீஸ்வரன் (39) என்பது தெரியவந்தது.
அவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா்தான் பிளஸ் 2 மாணவி படுகொலை வழக்கில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். அவருக்கு வேடநத்தம் கிராமத்தில் வேறு யாராவது உதவி செய்தாா்களா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கைதான நபா் ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா். கடந்த 2020-இல் எட்டயபுரம் அருகே கீழ ஈரால் கிராமத்தில் 60 வயது மூதாட்டி பாப்பாவை பாலியல் வன்கொடுமை செய்து நகைகள் பறித்த வழக்கில் 2022-இல் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் கண்காணிப்பாளா் பேட்டி: சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டிருந்த 98 சிசிடிவி பதிவுகள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 2,514 தொலைபேசி தகவல்கள் சேகரிக்கப்பட்டன. மொத்தம் 461 ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
அனைத்து விசாரணைகளும் அறிவியல் பூா்வமாக மேற்கொள்ளப்பட்டு, ஒருவா் கைது செய்யப்பட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமியின் படம், பெயரை பயன்படுத்தக் கூடாது. அதை மீறியதாக இதுவரை 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதி கிராமங்களில் 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலா்களின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கை உயா்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...