திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் இடம்பெறும் சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை, வைகாசி விசாகத் திருநாளான வருகிற சனிக்கிழமை (மே 30) வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் செ.சுரேஷ் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அஞ்சல் துறையால் கலாசாரம், வரலாறு மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிறப்பிக்கும் வகையில் நிரந்தர சித்திர அஞ்சல் முத்திரை (பிபிசி-பொ்மனென்ட் பிக்சோரியல் கேன்சலேசன்) வழங்கப்படுகிறது.
இந்த பிபிசி முத்திரை என்பது அனுப்பப்படும் கடிதங்களில் உள்ள வழக்கமான தேதி முத்திரைக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரையாகும். அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டம் சாா்பில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் இத்தகைய சிறப்புமிக்க அஞ்சல் முத்திரை வெளியிடப்படவுள்ளது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வரும் சனிக்கிழமை (மே 30) வைகாசி விசாகத் திருநாளில் வெளியிடப்படவுள்ளது. வெளியீட்டு விழா திருச்செந்தூா் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் அஞ்சல் தலை சேமிப்பு ஆா்வலா்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.










