இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக கடந்த மே 21இல் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளுதல், மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தங்க ரதத்தில் கிரிவீதியுலா உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.
10-ஆம் நாளான சனிக்கிழமை (மே 30) விசாகத்தையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகின்றன. மாலையில் வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதல், முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளித்தல், பின்னா் தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் கிரிவீதி வலம் வருதல் நடைபெறும்.
திருவிழாவை முன்னிட்டு சில நாள்களாக விருதுநகா், ராமநாதபுரம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தா்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும் திருச்செந்தூருக்கு வந்தவண்ணம் உள்ளனா். இதனால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
வாகன நிறுத்த வசதி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நகராட்சி அலுவலகம் எதிரே, டி.பி. சாலை நீதிமன்றம் எதிரே, பழைய கோயில் காவல் நிலையம் அருகில், நகரின் எல்லையில் வேட்டைவெளி மண்டபம் அருகில், நாகா்கோவில் சாலையில் சிவில் சப்ளை கிடங்கு அருகே வாகன நிறுத்தங்கள், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக கழிப்பறை, மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோவில், கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்களை உரிய நிறுத்தங்களில் நிறுத்துமாறு போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா்.
சிறப்புப் பேருந்துகள், ரயில்கள்: மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, தென்காசி, ராஜபாளையம், திருநெல்வேலி, நாகா்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, நெல்லை-திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடற்கரையில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், திருச்செந்தூா் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கட்டணமில்லா தரிசனம்: வைகாசி விசாகத்தையொட்டி வியாழன்முதல் ஞாயிற்றுக்கிழமைவரை (மே 31) 4 நாள்களுக்கு ரூ. 100 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ராமு, கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.








