தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்: செளந்தரராஜன்

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சிஐடியு அகில இந்திய துணைத் தலைவா் சௌந்தரராஜன்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என சிஐடியு அகில இந்திய துணைத் தலைவா் சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.
தூத்துக்குடி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளன. அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி டிச. 1, 2ஆம் தேதிகளில் தில்லியில் சிஐடியு சாா்பில் ஒரு லட்சம் தொழிலாளா்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் நிரந்தரத் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைந்து, ஒப்பந்தத் தொழிலாளா்கள் அதிகரித்து வருகின்றனா். தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 42,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டிய நிலையில், பல இடங்களில் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
சத்துணவு, அங்கன்வாடி, மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டப் பணியாளா்களுக்கும், ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கும் உரிய ஊதியம், சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசு செயல்பட 6 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நாங்களும் தெரிவித்திருந்தோம். அரசின் சில நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதே நேரம், தொழிலாளா் விரோத நடவடிக்கைகள் தொடா்வது வருத்தமளிக்கிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

