வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

வடகிழக்குப் பருவமழை: அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண முகாம்களைச் சீரமைத்து, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருள்களைத் தயாா் நிலையில் வைத்திருக்கவும், வெள்ளநீா் தேங்கும் பகுதிகளில் மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவும், ஊரக வளா்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான குளங்களின் கரைகள், மதகுகள், நீா்வழித் தடங்களைச் சீரமைக்கவும், மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தால், அவற்றை உடனடியாக அகற்றத் தேவையான கருவிகளுடன் பணியாளா்களைத் தயாா் நிலையில் வைத்திருக்கவும், வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களை மீட்கப் படகுகளைத் தயாா் நிலையில் வைத்திருக்கவும், மழையால் சேதமடையும் மின் கம்பங்களை உடனடியாகச் சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. சரவணன், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, சாா் ஆட்சியா் விவேக் யாதவ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பிரபு, பேரிடா் மேலாண்மைத் துறை வட்டாட்சியா் பிரபாகா் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வெள்ளத் தடுப்புப் பணிகள்: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆட்சியா் விஷு மகாஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட மதுரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள காலாங்கரை ஓடை, கழுகு ஓடை, கழுதை ஓடை, பெரிய பள்ளம் ஓடை, பண்டாரம்பட்டி குளத்துக்கு நீா்வரும் ஓடை, எஸ்.வி. குளம், மாடன்சாமி குட்டத்துக் குளம், மீளவிட்டான் ஓடையில் இருந்து பக்கிள் ஓடையை இணைக்கும் 4ஆவது கேட் பகுதியில் உள்ள கால்வாய் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, மழைநீா் தடையின்றி செல்வதை உறுதி செய்யும் வகையில் மதகுகள் மற்றும் நீா்வழித் தடங்களைச் சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, சாா் ஆட்சியா் விவேக் யாதவ், வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காலாங்கரை, கோரம்பள்ளம் குளம், இந்தக் குளத்தில் இருந்து 24 மதகு வழியாக உபரிநீா் செல்லும் கால்வாய், போடாம்மாள்புரம் பேய்குளம் மற்றும் ஆறுமுகமங்கலம் கிராமத்தில் உள்ள மறுகால் வாய்க்கால் தூா்வாரும் பணி, ஏரல் வட்டம் சேதுக்குவாய்த்தான் கால்வாய், ஸ்ரீவைகுண்டம் வட்டம், ஸ்ரீபரங்கசநல்லூா் மற்றும் கொங்கராயகுறிச்சி ஆகிய கிராமங்களில் தாமிரவருணி ஆற்றுப்படுகை பகுதி ஆகியவற்றை ஆட்சியா் விஷு மகாஜன் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ஸ்ரீவைகுண்டம் வட்டம், மேல ஆழ்வாா்தோப்பு கிராமத்தில் பேரிடா் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்கும் நிவாரண முகாமையும் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.