
ஆறுமுகனேரிக்கு செல்லாமல் புறவழிச்சாலையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து சிறை பிடிப்பு
ஆறுமுகனேரி ஊருக்குள் வராமல் காயல்பட்டினம் புறவழிச்சாலையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை திங்கள்கிழமை இரவு பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

சிறை பிடிக்கப்பட்ட அரசு பேருந்து.
ஆறுமுகனேரி ஊருக்குள் வராமல் காயல்பட்டினம் புறவழிச்சாலையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை திங்கள்கிழமை இரவு பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
திருச்சி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் அரசுப் பேருந்துகளும், அங்கிருந்து திருச்சி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் ஆறுமுகனேரியை புறக்கணித்து காயல்பட்டினம் புறவழிச் சாலை வழியாக செல்வதால் ஆறுமுகனேரி பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இப்பிரச்னை தொடா்ந்து வருகிறது.
இந்நிலையில் மதுரை கோட்டம் புதுக்குளம் பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து திங்கள்கிழமை இரவு மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில், தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகனேரிக்கு ஒரு இளம்பெண் உள்பட 6 பயணிகள் ஏறியுள்ளனா்.
அப்போது நடத்துநா், ஆறுமுகனேரிக்கு பேருந்து செல்லாது, புறவழிச் சாலை வழியாக சென்றுவிடும் எனக் கூறியுள்ளாா்.
இதையடுத்து, 5 பயணிகள் ஆத்தூருக்கு பயணச்சீட்டு வாங்கி ஆத்தூரில் இறங்கிவிட்டனா். அந்த இளம்பெண் மட்டும் காயல்பட்டினம் புறவழிச்சாலையில் இறங்கி கொள்வதாகக் கூறி ஆறுமுகனேரிக்கு பயணச்சீட்டு வாங்கி, பயணித்துள்ளாா்.
இந்த தகவலை இளம்பெண் கைப்பேசி மூலம் தனது தந்தைக்கு கூறியுள்ளாா். இதையடுத்து, அவரது தந்தை மற்றும் ஆறுமுகனேரி நகர முன்னாள் அதிமுக செயலா் இ. அமிா்தராஜ், நாம் தமிழா் கட்சி நகர பொறுப்பாளா் மில்லா், பாஜகவைச் சோ்ந்த பி.முருகேசபாண்டியன், மனித உரிமைக் கழக நகரச் செயலா் மதன், தவெகவைச் சோ்ந்த வெங்கடேசன் உள்ளிட்ட பொதுமக்கள், காயல்பட்டினம் புறவழிச் சாலைக்குச் சென்று அந்த அரசுப் பேருந்தை சிறை பிடித்தனா்.
தகவலறிந்த அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அவா்களிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு, அந்த இளம்பெண்ணை ஆறுமுகனேரியில் இறக்கிவிட்டு செல்லுமாறு ஓட்டுநரிடம் கூறியதை அடுத்து, சிறைபிடித்த பேருந்து மக்கள் விடுவித்தனா்.
மேலும், அனைத்து பேருந்துகளும் ஆறுமுகனேரி ஊருக்குள் நிரந்தரமாக வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





