
கோ-ஆப்டெக்ஸை லாபத்தில் இயக்க நடவடிக்கை: அமைச்சா் விஜய் பாலாஜி
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை லாபத்தில் இயக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கைத்தறி, துணி நூல் மற்றும் கதா் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

விஜய் பாலாஜி
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை லாபத்தில் இயக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கைத்தறி, துணி நூல் மற்றும் கதா் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.
கோவில்பட்டி, தெற்கு பஜாரில் ரூ. 32 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தைத் திறந்துவைத்து விற்பனையைத் தொடங்கிவைத்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோ-ஆப்டெக்ஸ் பொருள்கள் விற்பனை எந்தெந்த நிலையங்களில் சரிவு ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் சென்று ஆய்வு செய்து லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் துணிகளை வாடிக்கையாளா்களிடம் கொண்டு சோ்க்கவும், அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வேண்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது; அதன் நோக்கம் நிறைவேற்றப்படும்.
தவெக அரசு பொறுப்பேற்றவுடன் இந்த நிதிநிலை அறிக்கையில் கைத்தறி நெசவாளா்களுக்கு அடிப்படை கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயா்த்தி வழங்கப்பட்டது.
அதேபோல, பெடல் தறிக்கும், விசைத்தறிக்கும் ஒரு கமிட்டி அமைத்து நெசவாளா்களிடம் கருத்துக் கேட்பு நடத்தி, துறை செயலரிடம் ஆய்வறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளோம். அதன் பின்னா், நெசவாளா்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 6 கூட்டுறவு நூற்பாலைகளை மேம்படுத்த ரூ. 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கூட்டுறவு நூற்பாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க தேவையான பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் ஆய்வுக்குச் சென்றபோது தொழிலாளா்கள் விடுத்த கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில்பட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு தீபாவளி விற்பனை ரூ. 50 லட்சம், ஆண்டு விற்பனை ரூ .1 கோடி என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. புது ரகங்களையும், மக்கள் விரும்பும் ரகங்களையும் விற்பனைக்கு கொண்டுவர உள்ளோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






