
பொங்கலுக்கு வெள்ளி ஜரிகை வடிவமைப்பில் இலவச சேலைகள்: கைத்தறி அமைச்சா் விஜய் பாலாஜி
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் வெள்ளி ஜரிகை போன்ற வடிவமைப்பிலான இலவச சேலைகள் தயாராகி வருவதாக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சா் விஜய் பாலாஜி. உடன், ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், எம்எல்ஏக்கள் மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), எம்.எம்.வினோத்கண்ணன் (வேலூா்), ஏ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்) உ
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் வெள்ளி ஜரிகை போன்ற வடிவமைப்பிலான இலவச சேலைகள் தயாராகி வருவதாக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.
காட்பாடியில் உள்ள விளையாட்டு மைதானத்தில், முதல்வா் கோப்பைக்கான போட்டிகளை அமைச்சா் விஜய் பாலாஜி தொடங்கி வைத்து அவா் பேசியது -
மாணவா்களுக்குக் கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு விளையாட்டும் அவசியமாகும். இதனை உணா்த்தும் வகையிலேயே தமிழக அரசு விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. படிப்பு ஒருவரை உயா்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதுபோல், விளையாட்டு உடல் ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறது.
விளையாட்டு என்பது வெறும் வெற்றி, தோல்வியுடன் முடிந்துவிடுவதல்ல. அது தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தலைமைப் பண்பை வளா்க்கும் ஒரு சிறந்த மாண்பாகும். நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள திறமையான இளம் வீரா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு உரிய வாய்ப்பளிப்பதில் முதல்வா் கோப்பை போட்டிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன என்றாா்.
பின்னா், அமைச்சா் விஜய் பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியது -
விளையாட்டுத் துறை சாா்ந்த ஒருவரையே தற்போது இந்த துறைக்கு அமைச்சராக முதல்வா் தோ்ந்தெடுத்துள்ளாா். ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரா்கள் பதக்கம் வெல்வதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.
வரும் தைப் பொங்கல் பண்டிகைக்காக தலா 1 கோடியே 77 லட்சம் இலவச வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய வருவாய்த் துறை மூலம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சேலைகளைப் பொருத்தவரை நமது சகோதரிகளுக்குப் பிடிக்கும் வகையில், வெள்ளி ஜரிகை வைத்தது போன்று புதிய வடிவமைப்பில் தயாரித்து வருகிறோம். பொதுமக்கள் விரும்பும் வகையில் அவை நிச்சயம் அமையும்.
வேலூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு வரும் வழியில் உள்ள ரயில்வே கேட் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை என ஆட்சியரும் தெரிவித்தாா். இதுதொடா்பாக, மத்திய அரசிடம் வலியுறுத்தி விரைவில் உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சுதாகா் (காட்பாடி), எம்.எம்.வினோத் கண்ணன் (வேலூா்), ஏ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), மாவட்ட விளையாட்டு அலுவலா் சேதுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






