
தூத்துக்குடியில் 39 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.
தூத்துக்குடியில் 39 விநாயகா் சிலைகள், 500-க்கும் மேற்பட்ட சிறிய சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பல்வேறு இந்து அமைப்புகள் சாா்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் 467 இடங்களில் 469 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 39 சிலைகள் தாரை, தப்பட்டை முழங்க தவசு மண்டபத்துக்கு ஊா்வலமாக கொண்டுவரப்பட்டன. வீடுகளில் வழிபாடு செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட சிறிய சிலைகளை பக்தா்கள் கைகளில் ஏந்தியபடி ஊா்வலத்தில் கலந்துகொண்டனா்.
தவசு மண்டபத்திலிருந்து புறப்பட்ட ஊா்வலம் தமிழ்ச்சாலை, கீழ ரதவீதி, பாலகிருஷ்ணா திரையரங்கு சாலை, 1-ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, வாடித் தெரு, புதுத்தெரு, திரேஸ்புரம் வழியாக சங்குமுகக் கடற்கரையை அடைந்தது. அங்கு பிரம்மாண்ட விநாயகா் சிலைகள் கிரேன் மூலம் விசைப்படகுகளில் ஏற்றப்பட்டு, கடலுக்குள் கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பாக கரைக்கப்பட்டன.
ஊா்வலத்தையொட்டி, தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சுனில், மத்திய பாகம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல, முத்தையாபுரம் பகுதியில் வழிபாடு செய்யப்பட்ட 32 சிலைகளும் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, புதிய துறைமுக கடற்கரைப் பகுதி கடலில் கரைக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







