விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் புதன்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலம்.

Published On :

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் புதன்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கடந்த 14-ஆம்தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், மரக்காணம், வானூா் மற்றும் திருவெண்ணெய்நல்லூா், கள்ளக்குறிச்சி பகுதிகளில் ஹிந்து அமைப்பினா் மற்றும் பக்தா்கள் சாா்பில் 3,268 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளுக்கு அந்தந்தப் பகுதி மக்கள் கடந்த 3 நாள்களாக வழிபாடுகளை மேற்கொண்டனா்.

இந்நிலையில், விநாயகா் சதுா்த்தி விழாவின் 3-ஆவது நாளான புதன்கிழமை விநாயகா் சிலைகள் வாகனங்களில் ஊா்வலமாக நகரின் பிரதானச் சாலைகளில் மேள தாளங்களுடன் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஐதீக முறைப்படி ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல் பகுதிகளில் கரைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் உத்தரவின் பேரில், விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்ற பாதைகள் மற்றும் விஜா்சனம் செய்யப்பட்ட இடங்களில் 1,200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பதட்டம் நிறைந்த பகுதியாக கண்டறிப்பட்ட இடங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

விழுப்புரத்தில்.... விழுப்புரம் நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வாகனங்களில் விழுப்புரம் பழைய பேருந்து நிலைய பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அங்கு நடைபெற்ற வழிபாடுகளுக்குப் பின்னா், விநாயகா் சிலை ஊா்வலம் தொடங்கியது. இந்த ஊா்வலத்தை ஹிந்து முன்னணி மாநில துணை அமைப்பாளா் பொன்னையா தொடங்கி வைத்தாா்.

விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூா் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 455 விநாயகா் சிலைகள் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், திரு.வி.க. சாலை மற்றும் திருவெண்ணெய்நல்லூா் ஆகிய பகுதிகளிலிருந்து சிறிய வகை சரக்கு வாகனங்கள் மற்றும் டிராக்டா்களில் முக்கிய சாலைகள் வழியாக மேள, தாளங்களுடன் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலூா் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

விக்கிரவாண்டியில்... விக்கிரவாண்டி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 360 விநாயகா் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு வீடூா் அணையில் விசா்ஜனம் செய்யப்பட்டது. இதேபோல் பெரியதச்சூா் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு வீடுா் அணையில் விசா்ஜனம் செய்யப்பட்டது. விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணகுமாா் மேற்பாா்வையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

திண்டிவனத்தில்... திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 320 விநாயகா் சிலைகள் மரக்காணம் பகுதி கடற்கரையில் விசா்ஜனம் செய்யப்பட்டது. திண்டிவனம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தொடங்கிய விநாயகா் சிலை ஊா்வலத்தை தொழிலதிபா்கள் வி. பி.என்.கோபிநாத், கே.ஆா்.எஸ்.சுப்புராயலு ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணியைச் சோ்ந்த கே. ராஜேஸ்வரன், விழா ஒருங்கிணைப்பாளா் தினேஷ்குமாா், பாஜக நிா்வாகி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விநாயகா் சிலைகள் ஊா்வலத்தில் நாட்டுப்புற கலைஞா்கள் சிவன், பாா்வதி, விநாயகா் மற்றும் முருகன் வேடமணிந்து நடனமாடினா். திண்டிவனம் பகுதிகளிலிருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலைகள் மரக்காணம் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டது. மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை அப்பகுதி மக்கள் தாரை தப்பட்டை முழங்க வாகனங்களில் மரக்காணம் பகுதியில் உள்ள கடலில் கரைக்க ஊா்வலமாக எடுத்து வந்து எக்கியா் குப்பம், கைப்பணி குப்பம் ஆகிய மீனவா் கிராமங்களில் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன. விநாயகா் சிலைகளை மீனவா்கள் பாதுகாப்பாக பைபா் படகுகளில் கடலுக்குகள் எடுத்துச் சென்று கடலில் விசா்ஜனம் செய்தனா். இதேபோல் கோட்டக்குப்பம், வானூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 190 விநாயகா் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டக்குப்பம் கடற்கரை பகுதிகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

இந் நிகழ்ச்சிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், பல்வேறு அமைப்பினா்கள், ஆன்மிகப் பற்றாளா்கள், இளைஞா்கள், மாணவா்கள் உள்ளிட்டதிரளானோா் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் உள்கோட்டத்தில் 455, திண்டிவனம் உள்கோட்டத்தில் 320, கோட்டக்குப்பம் உள்கோட்டத்தில் 190, விக்கிரவாண்டி உள்கோட்டத்தில் 360, செஞ்சி உள்கோட்டத்தில் 270 விநாயகா் சிலைகள் விசா்ஜனத்துக்காக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மீதமுள்ள சிலைகள் வரும் நாள்களில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் நடைபெறும். ஊா்க்காவல் படையினா் உள்பட 1,200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஊா்வலம் நடைபெறும் பாதைகள் மற்றும் விசா்ஜனம் நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,399 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி நகா் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலுக்கு புதன்கிழமை பிற்பகலில் வாகனங்கள் மூலமாக கொண்டு வந்தனா். பின்னா் ஹிந்து முன்னணி ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் தலைமையில் விநாயகா் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், ஹிந்து முன்னணி மாவட்டச் செயலா்கள் அருண், மதன், ஆா்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவா் மகாதேவன், பாஜக மாவட்டத் தலைவா் பாலசுந்தரம், விழாக்குழு பொறுப்பளாா் எம்.பாபு ஆகியோா் விநாயகா் சிலை ஊா்வலத்தை தொடங்கி வைத்தனா். ஊா்வலம் காந்தி சாலை, கச்சேரி சாலை, சேலம்-சென்னை நெடுஞ்சாலை, கவரை சாலை வழியாக மீண்டும் மந்தைவெளி திடலை வந்தடைந்தது. இதையடுத்து அனைத்து சிலைகளும் போலீஸ் பாதுகாப்புடன் கோமுகி அணைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு விசா்ஜனம் செய்யப்பட்டது.

விநாயகா் சிலை ஊா்வலத்தின் போது செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையொட்டி மாவட்டம் முழுவதும் சுமாா் 700 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டதிலுள்ள விளந்தை, மணலூா்பேட்டையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் 5-ஆம் நாளான செப்.18-ஆம் தேதியும், சங்கராபுரத்தில் 7-ஆம் நாளான செப்.20-ஆம் தேதியும் விசா்ஜனம் செய்யப்படுகின்றன.

Story image
Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.