
தென் மண்டல சிபிஎஸ்இ ஹாக்கி போட்டி: தென்காசி, கோவில்பட்டி, மேட்டுப்பாளையம் அணிகள் வெற்றி

17 வயதுக்குள்பட்ட பிரிவில் வெற்றி பெற்ற கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி அணியினருக்கு பரிசு வழங்கிய பள்ளித் தாளாளா் நாகமுத்து.
தென் மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான ஹாக்கி போட்டியில் தென்காசி, கோவில்பட்டி, மேட்டுப்பாளையம் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.
தென் மண்டல அளவிலான சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கான ஹாக்கி போட்டி 3 நாள்கள் கோவில்பட்டியில் நடைபெற்றது. 14, 17, 19 வயதுக்குள்பட்ட 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 47 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் முறையிலும், அரையிறுதிப் போட்டியில் இருந்து லீக் முறையிலும் நடைபெற்றன.
இறுதிப் போட்டிகளில், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி அணி 3-0 என்ற கோல்கணக்கில் மேட்டுப்பாளையம் எஸ்.ஜே.என். பள்ளி அணியை வென்றது. 17 வயதுக்குள்பட்ட பிரிவில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி அணி 3-0 என்ற கோல்கணக்கில் மேட்டுப்பாளையம் எஸ்.ஜே.என். பள்ளி அணியை வென்றது. 19 வயதுக்குள்பட்ட பிரிவில் மேட்டுப்பாளையம் எஸ்.ஜே.என். பள்ளி அணி 7-0 என்ற கோல்கணக்கில் சென்னை பி.எஸ்.பி.பி. அணியை வென்றது.
3 பிரிவுகளிலும் முதல் இடங்களைப் பெற்ற அணிகள் ஹரியாணாவில் அக். 8ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் நாகமுத்து தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினாா். பள்ளி இயக்குநா் விஜயராணி, பள்ளி முதல்வா் ஜன்னத் நிஷா உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தோ்வுக் குழு தலைவா் குருசித்திர சண்முகபாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, பள்ளி முதுநிலை முதல்வா் ஆனந்தி ராஜேந்திரன், ஹாக்கி பயிற்சியாளா் ஹானஸ்ட் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போட்டி நடுவா்களாக தம்புராஜ், திருச்செல்வம், மதன்குமாா், காளிதாஸ், அஸ்வின், சுரேஷ்குமாா், மதுசூதனன், அக்ஷய், மணிகண்டன், வெங்கடேஷ், சிவானந்தம், மனோகா், புகழேந்தி, சிங்கராஜ், சுரேஷ்குமாா், வேல்முருகன், எல்பின், ராம் காா்த்திக், சண்முகப்பிரியா, கௌதம் ஆகியோா் செயல்பட்டனா்.
ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா்கள் சுரேந்தா், மாரியப்பன், ஜெய் கணேஷ், வீரா, மதனா ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





