திருச்சி-மானாமதுரை ரயில் நீட்டிக்கப்படுமா?
புதுக்கோட்டை, டிச. 29: ஜனவரி 31-ம் தேதியுடன் ரத்து செய்யப்படவுள்ள திருச்சி-மானாமதுரை பயணிகள் ரயில் சேவையைத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 3 மாவட்ட மக


புதுக்கோட்டை, டிச. 29: ஜனவரி 31-ம் தேதியுடன் ரத்து செய்யப்படவுள்ள திருச்சி-மானாமதுரை பயணிகள் ரயில் சேவையைத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 3 மாவட்ட மக்கள் மத்தியிலும் பரவலாக எழுந்துள்ளது. இந்த பிரச்னை அரசியல் பிரச்னையாகவும் உருமாறிவருகிறது.
திருச்சி-மானாமதுரை ரயில் தடமானது, 3 மாவட்டங்கள் வழியாகச் செல்லும், அதே சமயம், பின் தங்கிய பகுதிகள் அதிகம் கொண்ட ஊர்களை இணைக்கும் தடமாகும். முன்பு, "மீட்டர் கேஜ்' பாதையாக இருந்தபோது, இந்தத் தடத்தில் ஏறத்தாழ 7 ரயில்கள் இயக்கப்பட்டன. ராமேசுவரம் செல்லும் வழியில் இருப்பதால், போதுமான அளவுக்கு ரயில் சேவையை இந்தப் பகுதி மக்கள் பெற்றுவந்தனர்.
இதனிடையே,ரூ. 280 கோடியில் இந்தத் தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தத் தடத்தில் ரயில் சேவையும் தொடங்கப்பட்டது. ஆனால், ராமேசுவரம் விரைவு ரயில், சென்னை விரைவு ரயில், திருச்சி - ராமேசுவரம் ஆகிய 3 ரயில்கள் மட்டுமே இத்தடத்தில் இயக்கப்பட்டன.
இந்த ரயில்களும் குறிப்பிட்ட இந்த 3 மாவட்டப் பயணிகளுக்குத் தேவையான நேரத்தில் இயக்கப்படவில்லை. ஆகையால், இந்த ரயில்கள் போதுமானவை அல்ல; கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.
இந்நிலையில், மானாமதுரை - திருச்சி இடையேயான புதிய ரயில் சேவை கடந்த ஏப். 20-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. மானாமதுரையிலிருந்து காலை 7.55 மணிக்குப் புறப்பட்டு, திருச்சிக்கு பகல் 12.15 மணிக்குச் சென்றடையும் வகையில் ஒரு ரயிலும் திருச்சியில் பிற்பகல் 3.55 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7.35 மணிக்குச் சென்றடையும் வகையில் இன்னொரு ரயிலும் இயக்கப்பட்டன. இந்த ரயில் சேவை பயணிகளுக்குப் பெரும் பயனாக அமைந்தது. பயணிகளுக்கு வசதியோடு, கட்டணம் குறைவானதாகவும் இருந்தது. மானாமதுரையிலிருந்து திருச்சிக்கு பஸ்ஸில் செல்ல ரூ. 52 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் கட்டணமோ வெறும் ரூ. 23 மட்டுமே. தவிர,இடையிலுள்ள ஊர்களைச் சேர்ந்த பயணிகள் சீசன் டிக்கெட் மூலம் அதிகபட்சம் மாதம் ரூ. 190 செலவில் சென்றும் வந்தனர்.
இதனால்,பின் தங்கிய பகுதியான இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் - குறிப்பாக தொழிலாளர்கள் அருகிலுள்ள நகரங்களுக்கு வேலைக்குச் செல்லவும் ஊர் திரும்பவும் பெரும் பயனாக இந்த ரயில் சேவை இருந்தது. தவிர, புதுக்கோட்டை போன்ற ஊர்களிலிருந்து திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களைப் பிடிக்கவும் இந்த ரயில் உதவியாக இருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதால் சேவை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது ஜனவரி 31-ம் தேதியுடன் இந்தச் சேவை நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது இப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார் கூறியது: ""ஒவ்வொரு நாளும் பயணிகள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குப் பதிலாக குறைப்பது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. இந்த ரயில் சேவை இப்பகுதிக்கு மிக முக்கியமானது. ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும்'' என்றார் குமார்.
இதுகுறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டச் செயலரும் சமூக ஆர்வலருமான சி. அப்பாவுபாலாண்டார் கூறுகையில், ""இந்தப் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. வளர்ச்சியடைந்த பகுதிகளே தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களைப் பெறுகின்றன. இந்தப் பாரபட்சமான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்றார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன் தெரிவித்தது: ""உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நினைத்தால் இந்த ரயில் சேவையை நீட்டிக்கச் செய்ய முடியும். இந்த ரயில் சேவையால் பயனடைந்து வரும் பல ஊர்கள் அவருடைய மக்களவைத் தொகுதிக்குள் இருப்பதால், இந்தப் பிரச்னையில் உடனடியாக அவர் தலையிட வேண்டும். ரயில் சேவை தொடரும் என்று அறிவிப்பு வெளியாகும் வரை எங்களது கட்சி தொடர்ந்து போராடும்'' என்றார் முத்துக்குமரன்.
இதனிடேயே, அதிமுகவும் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று மாவட்ட மக்களின் கவனம் இந்த பிரச்னையில் குவிந்திருப்பதால், ரயில் சேவை தொடரும் என்ற அறிவிப்பு வரும் வரை போராட்டங்களும் தொடரும் என்றே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...