திருச்சி, மார்ச் 31: பேருந்துகள், கார்கள், வேன்களில் டிவியை பார்த்திருக்கிறோம். ஆனால், திருச்சி மாநகரில் முதல் முறையாக டிவியுடன் கடந்த சில நாள்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது ஓர் ஆட்டோ.
திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜி. வாசுதேவன் (42). ஆட்டோ ஓட்டுநரான இவர், மற்ற ஆட்டோக்களை காட்டிலும் வித்தியாசமாக ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்து, அதைச் செயல்படுத்தியும் உள்ளார்.
அப்படி என்ன வித்தியாசம் என்று பார்த்தால், திருச்சி மாநகரில் முதல் முறையாக தனது ஆட்டோவில் சிறிய வடிவிலான டிவியை பொருத்தி உள்ளார். ஆட்டோவின் உள் மேல் பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள இந்த டிவியுடன், தனியே கீழ்ப் பகுதியில் விசிடி பிளேயரும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது செல்போன்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும் வகையில் ரீசார்ஜர்களும் பொருத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சி ஏன்?: பொதுவாக ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே அதிகம் காசு வாங்குவார்கள், இஷ்டத்துக்கு ஓட்டிச் செல்வார்கள் என்ற எண்ணம்தான் பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது.
ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் அப்படி இல்லை. நம்முடைய ஆட்டோவில் பயணிகள் பயணிப்பது குறைந்த நேரம்தான். அந்த நேரமும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆட்டோவில் டிவியை பொருத்தியுள்ளேன். என்னிடம் உள்ள ஆட்டோ புதிது என்பதால், அதில் டிவியை பொருத்த எந்த இடையூறுமில்லை. சிறிய அளவிலான டிவியுடன், விசிடி பிளேயரும் வாங்கி பொருத்தியுள்ளேன்.
தற்போதைக்கு நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்பி வருகிறேன். குழந்தைகள் ஆட்டோவில் பயணம் செய்தால் அவர்கள் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் படங்களும் ஒளிபரப்ப உள்ளேன். ஆட்டோவில் டிவி பொருத்தியுள்ளதைக் கண்டு மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த மற்ற ஆட்டோ ஓட்டுநர்களும் இதுகுறித்த விவரங்களை கேட்டுள்ளனர்.
டிவியால் கூடுதல் கட்டணமா?:ஆட்டோவில் டிவி பொருத்தப்பட்டதால் கூடுதல் கட்டணம் எதுவும் வாங்கமாட்டேன். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நியாயமான கட்டணம் என்று நிர்ணயித்து, அந்தத் தொகைக்கு மேல் நான் வாங்குவதில்லை.
அதுபோல, இனாம்தார் தோப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் யாரும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்பதைக் கண்டிப்பாகப் பின்பற்றி வருகிறோம்.
ஆட்டோவில் பயணம் செய்வதற்காக ஏறும் போது பயணியிடம் இருக்கும் மகிழ்ச்சி, இறங்கும் போதும் இருக்க வேண்டும்.
பயணியிடம் காசு வாங்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாகனத்தை ஓட்டாமல் பாதுகாப்பாகவும், கனிவான பேச்சுடனும் ஆட்டோவை ஓட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் பணியாற்றி வருகிறேன்.
ஆட்டோவில் டிவி பொருத்தி சில நாள்களேயானாலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. வெளியூரைச் சேர்ந்த பயணி ஒருவர் ஆட்டோவில் பயணித்துவிட்டு, நல்ல முயற்சி செய்துள்ளீர்கள் என்று பாராட்டிச் சென்றார்.
டிவியைத் தொடர்ந்து, ஆட்டோவில் விரைவில் மீட்டர் பாக்ஸýம் பொருத்த உள்ளேன் என்கிறார் வாசுதேவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.