சொந்த இடமிருந்தும் வாடகைக் கட்டடத்தில் அஞ்சல் நிலையம்

நீடாமங்கலம், ஆக. 5: சொந்த இடமிருந்தும், வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது நீடாமங்கலம் துணை அஞ்சல் நிலையம்.      மன்னார்குடி அஞ்சல் நிலையத்தின் கீழ் இந்தத் துணை அஞ்சல் நிலையம் ஏறத்தாழ 75 ஆண்டுகளாக இய
Updated on
1 min read

நீடாமங்கலம், ஆக. 5: சொந்த இடமிருந்தும், வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது நீடாமங்கலம் துணை அஞ்சல் நிலையம்.

     மன்னார்குடி அஞ்சல் நிலையத்தின் கீழ் இந்தத் துணை அஞ்சல் நிலையம் ஏறத்தாழ 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிலையத்தின் மூலம் நீடாமங்கலம் நகரத்துக்குள்பட்ட மக்களுக்கும், சுற்றுப்புற கிராம மக்களுக்கும் அஞ்சல் சேவை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையத்தின் கிளை நிலையங்களாக நீடாமங்கலம் பஜார் கிளை, அரவூர், சித்தமல்லி, முல்லைவாசல், நரசிங்கமங்கலம், நார்த்தாங்குடி, ஒளிமதி, பெரம்பூர், மாணிக்கமங்கலம் ஆகிய கிராமக் கிளைகள் இயங்கி வருகின்றன.

  இதனிடையே, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் துணை அஞ்சல் நிலையத்துக்காக, நீடாமங்கலம் சர்வ மானிய அக்ரஹாரத்தில் சொந்தக் கட்டடம் வாங்கப்பட்டது. இதையடுத்து, அந்தக் கட்டடத்துக்கு இந்தத் துணை அஞ்சல் நிலையம் இட மாற்றம் செய்யப்பட்டது.

  ஆனால், அது பழைய கட்டடம் என்பதால், சிதிலமடைந்து ஆபத்தான நிலையை எட்டியது. எனவே, மீண்டும் வாடகைக் கட்டடத்துக்கு இந்தத் துணை அஞ்சல் நிலையம் மாற்றம் செய்யப்பட்டது.

  இதையடுத்து, சொந்த இடத்தில் சுற்றுச்சுவர் மட்டும் எழுப்பப்பட்டது. கட்டடம் எதுவும் கட்டப்படாமல் உள்ளதால், தற்போது அந்த இடத்தில் காட்டாமணக்குச் செடிகள் முளைத்து காடுபோலக் காணப்படுகிறது.

  தற்போது, மாதந்தோறும் ரூ. 2,000 வாடகை செலுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தத் துணை அஞ்சல் நிலையத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 24,000 கூடுதல் செலவு  ஏற்பட்டு வருகிறது.

  ஏற்கெனவே, மிகுந்த சிரமங்களுக்கிடையில் பல்வேறு போட்டிகளை எதிர்கொண்டு அஞ்சல் நிலையம் செயல்படும் நிலை உள்ளது.

  ஆனால், இந்தத் துணை அஞ்சல் நிலையத்துக்குச் சொந்த இடம் இருந்தும், கூடுதல் செலவாக வாடகையும் அளித்து வருவது அப்பகுதி சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  எனவே, நீடாமங்கலம் துணை அஞ்சல் நிலையத்தைச் சொந்த இடத்தில் கட்டடம் கட்டி அங்கு இட மாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளிடம் பல்வேறு தரப்பினரும் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

   இதனால், சொந்த இடம் இருந்தும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வாடகைக் கட்டடத்திலேயே அஞ்சல் நிலையம் இயங்குவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

  எனவே, வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அஞ்சல் நிலையத்துக்கு அரசு சார்பில் கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பது நீடாமங்கலம் பகுதி மக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com