துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?

நீடாமங்கலம், ஆக. 25: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையைப் போக்க துணை மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.     நீடாமங்கலம் பகுத
Updated on
1 min read

நீடாமங்கலம், ஆக. 25: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையைப் போக்க துணை மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

    நீடாமங்கலம் பகுதியில் அனைத்துத் துறை அரசு அலுவலகங்களும் உள்ளன. தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றும், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும், பழைய நீடாமங்கலத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளியும் இயங்கி வருகின்றன.

   பேரூராட்சிப் பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளின் கீழ் 2 ஆயிரத்து 228 குடியிருப்புகளும், 473 கடைகளும் உள்ளன. நீடாமங்கலம் நகரில் சுமார்   10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    நீடாமங்கலம் பேரூராட்சிப் பகுதிக்கு மின் விநியோகம் நீடாமங்கலம் வட்டம், கோவில்வெண்ணியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து பெறப்படுகிறது. இந்தத் துணை மின் நிலையத்திலிருந்துதான் நீடாமங்கலம், ரிஷியூர், அம்மாபேட்டை, ஆலங்குடியின் ஒரு பகுதி மற்றும் கோயில்வெண்ணி கிராமத்திற்கும் மின் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்தத் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில்  சுமார் 21 ஆயிரத்து 250 மின் நுகர்வோர் உள்ளனர். நீடாமங்கலம் பேரூராட்சியில் 6 ஆயிரத்து 200 மின் இணைப்புகள் உள்ளன. மேலும், நீடாமங்கலத்தில் மின் வாரியத்தின் இயக்குதலும், பராமரித்தலும் அலுவலகமும் உள்ளது.    இந்நிலையில், சாகுபடி நேரத்தில் மின் மோட்டார்கள் இயங்கும் நேரத்தில் மின் பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இதனால், மின் தடை அடிக்கடி ஏற்படுவதும், இதைக் கண்டித்து வர்த்தகர் சங்கம் மற்றும் இதர அமைப்புகள் சாலை மறியல், கடையடைப்பு என்று போராட்ட அறிவிப்பை வெளியிடுவதும், இதையடுத்து, அதிகாரிகளின் சமரசக் கூட்டம் நடத்துவதும், பின்னர், போராட்டம் வாபஸ் பெறப்படுவதும் வாடிக்கை.

   இதற்கிடையே, மின் தடை ஏற்படாமல் இருக்க, சில ஆண்டுகளுக்கு முன்னர் நீடாமங்கலம் நகரத்திற்கு தனியாக மின் பாதை அமைக்கப்பட்டு, கோவில்வெண்ணி துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

   ஆனால், அந்த மின் பாதையில் வெவ்வேறு கிராமங்களும் இணைக்கப்பட்டதன் விளைவாக, நீடாமங்கலம் நகரத்தில் மின் தடை அடிக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.   நீடாமங்கலத்தில் துணை மின் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்த பிரச்னை காரணமாக அத் திட்டமே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

   அரசு இதைக் கவனத்தில் கொண்டு, மின் வாரியம் மூலம் இப் பகுதியில் தேவையான நிலத்தை விலைக்கு வாங்கி,  துணை மின் நிலையத்தை நீடாமங்கலம் நகரில் ஏற்படுத்த முன் வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com