குறைந்தது மல்லிகை விலை

திருச்சி, ஜூன் 30: முகூர்த்த நாள் குறைவால் வழக்கத்தைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்திருக்கிறது மல்லிகைப் பூ விலை.      திருச்சி மாவட்டத்தில் எட்டரை, கோப்பு, போதாவூர், வியாழன்மேடு, புலியூர், ராச்சாண்டார
Updated on
2 min read

திருச்சி, ஜூன் 30: முகூர்த்த நாள் குறைவால் வழக்கத்தைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்திருக்கிறது மல்லிகைப் பூ விலை.

     திருச்சி மாவட்டத்தில் எட்டரை, கோப்பு, போதாவூர், வியாழன்மேடு, புலியூர், ராச்சாண்டார்திருமலை, வாழ்மால்பாளையம், ஈச்சம்பட்டி, கோபுரப்பட்டி, அழகியமணவாளம், பழையூர், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து மல்லிகை, ரோஜா, கதம்பப்பூ என்றழைக்கப்படும் கேந்தி, சம்பங்கி, வாடாமல்லி, அரளி உள்ளிட்ட பூக்களும் விற்பனைக்காக திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் உள்ள புஷ்ப கமிஷன் மண்டிகளுக்கு அந்தந்தப் பகுதி விவசாயிகள் மூலமாகக் கொண்டு வரப்படுகின்றன.

     மாசி மாதத்தில் தொடங்கி ஐப்பசி மாதம் வரை மல்லிகைப்பூ சீசன் என்பதால், இந்த மாதங்களில் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாகவே இருக்கும்.

  இதே போல, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் செவ்வந்திப்பூ வரத்தும் அதிகமாக இருக்கும்.

  இந்த மாதங்களில் குறைந்தது 500 கிலோ முதல் 1000 கிலோ வரை மல்லிகைப் பூ விற்பனைக்கு வரும். இதர காலங்களில் 300 முதல் 400 கிலோ வரை விற்பனைக்கு கொண்டு வரப்படும். அவ்வாறு கொண்டு வரப்படும் மல்லிகைப் பூ ஏலம் விடப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படும். ஒரு கிலோவில் தொடங்கும் ஏலம் 50 கிலோ வரை நடத்தப்படும்.

      "மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி எனத் தொடர்ந்து வந்த மாதங்களில் முகூர்த்த நாள்கள் அதிகம் இருந்ததால், பூவின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 100 -ல் தொடங்கி ரூ. 1000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. கமிஷன் மண்டிகளிலும் வியாபாரம் சற்று மும்முரமாகவே நடைபெற்று வந்தது.   ஆனால், தற்போது ஆனி மாதத்தில் அதிகமான முகூர்த்தங்கள் இல்லை என்பதால், மல்லிகைப்பூவின் விலையும் குறைந்திருக்கிறது, விற்பனையும் குறைந்திருக்கிறது.     கடந்த வாரத்தில் கிலோ ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்ற மல்லிகைப்பூ தற்போது கிலோ ரூ. 20 முதல் ரூ.40 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது. இந்த விலை பரவாயில்லை, கடந்த சில நாள்களுக்கு முன்பு கிலோ ரூ. 6 என்ற விலைக்கு மல்லிகைப்பூ விற்பனையானது' என்கிறார் காந்தி மார்க்கெட் புஷ்ப கமிஷன் மண்டி சங்கத்தின் இணைச் செயலர் சொக்கலிங்கம்.

      இந்த விலை இதே அளவுக்கும் நீடிக்குமா அல்லது விலை மேலும் குறையுமா என்பது வருகிற நாள்களில் மார்க்கெட்டுக்கு வரும் பூவின் வரத்தை வைத்துத்தான் கணிக்க முடியும் என்கிறார் அவர்.

     மல்லிகைப்பூ போன்று அதிகம் விற்பனையாகும் ரோஜாவின் விலையும் சற்றுக் குறைந்துள்ளது. கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ரோஜா, தற்போது கிலோ ரூ. 40 வரை ஏலம் மூலம் விற்பனையாகிறது. எனினும், வரும் நாள்களில் வரத்து அதிகமாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், விலை உயரக்கூடிய நிலை உள்ளது என்கின்றனர் காந்தி மார்க்கெட் புஷ்ப கமிஷன் மண்டி வியாபாரிகள்.  

   இதுபோல, சம்பங்கி, முல்லை,அரளி, வாடாமல்லி போன்ற பூக்களின் விலையும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. தற்போது இந்தப் பூக்கள் கிலோ ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்பனை செய்யப்படுகிறது என்கின்றனர் வியாபாரிகள்.

      மல்லிகையின் விலை அதிகமாக விற்பனையான போது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல லாபத்தைத் தந்தது. ஆனால், தற்போது மல்லிகையின் விலை வெகுவாகக் குறைந்திருப்பது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    என்றாலும், இந்த நிலை விரைவில் மாறும். எங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்கிறனர் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக பூக்கள் கொண்டு வரும் விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com