திருச்சி, ஜூலை 12: கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
கிராமப்புறத்தில் ஒரு குடும்பத்துக்கு குறைந்தது 100 நாள்களுக்கு வேலை என்ற உத்தரவாதத்துடன், தமிழகத்தில் 2008, ஏப்ரல் மாதத்தில் தொடங்கபட்டதுதான் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்.
இந்தத் திட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால்கள், குளங்களைத் தூர்வாருதல், ஆழப்படுத்துதல், சாலையோரக் கரைகளைப் பலப்படுத்துதல், அகலப்படுத்துதல் மற்றும் கிராமப்புறங்களில் புதிய மண் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் தொடங்கப்பட்ட இத் திட்டப் பணிகள் பின்னர், படிப்படியாக மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்தது தினமும் 7 மணி நேரம் வேலை செய்தாக வேண்டும். அவ்வாறு வேலை செய்தவர்களுக்கு அவர்களின் வேலை அளவைப் பொருத்து, ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இத் திட்டத்துக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் எனப் பெயரிட்டு, திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கூலித் தொகையை 2010, ஜனவரி 1 முதல் ரூ. 80 லிருந்து ரூ. 100 ஆகவும் உயர்த்தி வழங்கி வருகிறது அரசு.
இத் திட்டத்தில் பணியாற்றுவதற்காக கிராமத்தில் உள்ளவர்கள் விண்ணப்பித்தால் அவர்களைத் தேர்வு செய்யும் பணியை கிராம ஊராட்சித் தலைவர், மக்கள் நலப் பணியாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் செய்கின்றனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வேலை அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. மற்றொரு புகைப்படம் வேலைத் திட்டத்துக்கான நோட்டில் ஒட்டப்படுகிறது. பயனாளிகள் செய்த வேலை, அதற்கான ஊதியம் போன்றவை நோட்டிலும், அட்டையிலும் குறியீடு செய்யப்படுகிறது.
பயனாளி குறித்த விவரங்கள் கணினி மூலமாகப் பதிவு செய்யப்பட்டு, வங்கிக் கணக்கு விவரத்திலும், ஒன்றிய அலுவலகப் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருந்தால், அவர்களது கணக்கில் ஊதியம் செலுத்தப்படுகிறது. அவ்வாறு வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி, பின்னர் அவர்களது கணக்கில் ஊதியம் செலுத்தப்படுகிறது.
அலைக்கழிக்கப்படுவதாகப் புகார்: ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சேர்ந்து வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு முன்பு ஊராட்சித் தலைவர் பரிந்துரை செய்தாலே போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் பரிந்துரைக் கடிதம் இருந்தால்தான் கணக்கு தொடங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வங்கிக்கும், ஒன்றியக் குழு அலுவலகத்துக்கும் மாறி மாறி அலைய வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஊதியமும் காலதாமதமாக வழங்கப்படுவதாக பரவலாகப் புகார்கள் எழுந்துள்ளன.
அந்த வாரத்தில் செய்த வேலையின் விவரம் மதிப்பீடு செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளர், பொறியாளர் ஆகியோர் அப்பணி விவரங்களைப் பார்வையிட்டு, திங்கள்கிழமை பணம் வழங்குவதற்கான ஆணையை வழங்குகின்றனர். இதையடுத்து, நாங்கள் அந்த ஆணையை வங்கியில் கொடுத்து, அந்தந்தப் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கிறோம். இதில் எந்தவிதக் காலதாமதமும் இல்லை என்கின்றனர் ஊராட்சித் தலைவர்கள்.
வீணாகிறதா அரசு பணம்?: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் 10 பணிகள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு பணியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நெறிமுறைகள் மாநில அரசால் வகுக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு ஊராட்சியும் வாரத்துக்கு ரூ. 60,000-த்துக்குரிய வேலைகளை மேற்கொண்டாக வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பணிகள்தான் மீண்டும் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் அரசுப் பணம் வீணாவதாகவும் பரவலாகப் புகார்கள் எழுந்துள்ளன.
உதாரணத்துக்கு, சென்ற ஆண்டில் குறிப்பிட்ட சாலையின் கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்றாலும், அடுத்தாண்டிலும் அதே பணியைத் தேர்வு செய்து பணிகள் நடைபெறுவதாகவும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கிராமப்புறங்களைச் சேர்ந்த குடும்பத்துக்கு குறைந்தது 100 நாள்கள் வேலை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சரியான வழிகாட்டுதல் இல்லாததால், அரசின் பணம் வீணாகிறது. இதைச் செம்மைப்படுத்த அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்
ஊதியம் உயர்த்தப்படுமா?: இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்கள் குறைந்தபட்ச ஊதியத்தையே பெற்று வருகிறோம். ரூ. 100 என்ற ஊதியம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அந்தத் தொகையை முழுமையாகப் பெற முடியாது. செய்த வேலையின் அளவைப் பொருத்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது.
மற்ற பொருள்களின் விலை எல்லாம் உயர்ந்து கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டு வரும் இந்த நேரத்தில், இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தையும் ரூ. 150 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்கின்றனர் பயனாளிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.