திரிசங்கு நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள்
கரூர், ஜூலை 28: டீசல் விலை உயர்வால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் உள்நாட்டு வணிகத்திலும், போக்குவரத்திலும் தனியார் பங்களிப்பு அதிகமாக உள்ளது. என


கரூர், ஜூலை 28: டீசல் விலை உயர்வால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் உள்நாட்டு வணிகத்திலும், போக்குவரத்திலும் தனியார் பங்களிப்பு அதிகமாக உள்ளது. எனினும், அடிக்கடி உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் வெகுவாகப் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
நேரடியாக போக்குவரத்துக் கட்டணம் உயர்வு ஒருபுறம், வாகனங்களின் வாடகை உயர்வினால் உயர்த்தப்பட்ட பொருள்களின் விலைவாசி உயர்வு மற்றொருபுறம் என பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மத்திய அரசு கடந்த பிப்.26 -ல் வெளியிட்ட தனது 2010-11 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் பெட்ரால், டீசல் ஆகியவற்றின் உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தியது. இதனால், ரூ.48.80க்கு விற்பனையான பெட்ரோல் ரூ. 51.51 -க்கும், டீசல் ரூ. 35.48 -லிருந்து ரூ. 37.98 -க்கும் விலை உயர்த்தப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்துக் கட்டணங்களும் உயரத் தொடங்கின.
லாரி வாடகையும், பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் வேன், டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றின் கட்டணமும் உயர்ந்தன.
தனியார் பேருந்து உரிமையாளர்களும் அறிவிப்பு இல்லாத கட்டண உயர்வை அமல்படுத்தினர். டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்தினால் பயணக் கட்டணத்தை நாங்கள் உயர்த்தவில்லை, சில்லறைத் தட்டுப்பாட்டை போக்கவே முழுத் தொகை வரும்படி வசூலிக்கப்படுகிறது என்றும் அவர்கள் காரணம் கூறினர். ஆனால், பேருந்துக் கட்டணம் 50 பைசாவிலிருந்து ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளும் பி.பி., சூப்பர்பாஸ்ட், டீலக்ஸ் என்ற பெயர்களில் பயணிகளிடமிருந்து மறைமுகமாக அதிகக் கட்டணங்களை வசூலித்து வருகின்றன. நஷ்ட நிலைக்குச் சென்ற தனியார் பேருந்துகள் இந்த சிறிய அளவிலான கட்டண உயர்வினால் நிலமையை ஓரளவு சமாளித்து வந்தனர்.
ஆனால், மீண்டும் கடந்த ஜூன் 25 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோலுக்கு ரூ.3.73-ம், டீசலுக்கு ரூ.2 -ம், மண்ணெண்ணெய்க்கு ரூ.3-ம் லிட்டருக்கு உயர்த்தப்பட்டது. சமையல் காஸ் ரூ. 35 விலை உயர்த்தப்பட்டது.
இந்த விலை உயர்வுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்ததோடு, ஜூலை 5 -ல் அகில இந்திய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
எனினும், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு ரத்து செய்யப்படவில்லை. இந்த விலை உயர்வானது சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொருத்து 15 நாள்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை உயர்த்தப்பட்ட விலையில் மாற்றமில்லை.
எனினும், தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயராது என்று ஜூன் 27 ஆம் தேதி கோவையில் தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் வாகனங்கள் இயக்குவதற்குத் தேவையான எரிபொருளின் விலை நிரந்தரமில்லாமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. மற்றொரு புறம் 2001-ல் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டதோடு மீண்டும் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
2001-ல் ரூ.17.50 -க்கு விற்பனையான டீசலின் விலை தற்போது ரூ. 39.98 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. பேருந்து கூண்டு அமைப்பதற்கான இரும்பின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும், பேருந்தில் டீசலுடன் சேர்த்து பயன்படுத்தும் எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வாகனங்களுக்கான ஆயுள் காப்பீடு வரி உயர்வு, பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், இதர பணியாளர்களுக்கான கூலி, பராமரிப்புச் செலவு போன்றவை சுமார் 3 மடங்கு உயர்ந்துள்ளன.
இந்நிலையில், கேரளத்தில் ரப்பர் உற்பத்திக் குறைவினாலும், தேவை அதிகரித்துள்ளதாலும் ரப்பர் விலையும் சுமார் 20 சதம் வரை உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால், 2001 -லிருந்து சுமார் 10 ஆண்டுகளாக பேருந்துக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, பேருந்துக் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 10 பைசா உயர்த்த வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் மக்களை நேரடிப் பாதிப்பிற்குள்ளாக்கும் பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசு விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனினும், நஷ்டத்தை தாக்குபிடிக்க முடியாத தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதன் வெள்ளோட்டமாக கரூரிலிருந்து லட்சுமணப்பட்டிக்குச் செல்லும் தனியார் பேருந்தின் பயணக் கட்டணத்தை ஜூலை 26 ஆம் தேதி உயர்த்தி பயணிகளிடம் வசூலித்தனர். ஆனால், கூடுதல் தொகையை வழங்க மறுத்த பயணிகள் பேருந்தை சிறைபிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். சில்லறைத் தட்டுப்பாட்டால்தான் முழுத் தொகை வரும்படி வசூலிக்கப்பட்டதாக காரணம் கூறினார் பேருந்து உரிமையாளர்.
பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினால் அரசு மறைமுக மற்றும் நேரடி எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டிய சூழல் ஒருபுறம், டீசல் மற்றும் உதிரிப் பாகங்கள், கூலி, விலைவாசி உயர்வினால் தொழிலில் ஏற்படும் நஷ்டம் மற்றொருபுறம் என திரிசங்கு நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், பேருந்துக் கட்டணம் உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...