வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் காலியிடம் நிரப்பப்படுமா?

திருவெறும்பூர்,ஜூலை  30: கூட்டுறவே நாட்டுயர்வு என்று அரசு விளம்பரம் செய்தாலும், தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கத்தில் போதிய ஆள்கள் இல்லாமல், பணிகள் பாதிக்கும் நிலை
Updated on
2 min read

திருவெறும்பூர்,ஜூலை  30: கூட்டுறவே நாட்டுயர்வு என்று அரசு விளம்பரம் செய்தாலும், தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கத்தில் போதிய ஆள்கள் இல்லாமல், பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

   கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் விவசாயக் கடன் மற்றும் குறைந்த வட்டியில் நகைக் கடன்களை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் வழங்கி வருகின்றன.

   இவ்வாறு கிராமப்புற மக்களுக்கு உற்ற நண்பனாக விளங்கி வரும் இந்த வங்கிகளில் போதிய அளவுக்குப் பணியாளர்கள் இல்லாமல் அவ்வப்போது பூட்டிக் கிடப்பதால், வங்கிகளின் பணிகள் மட்டுமன்றி விவசாயப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

   திருச்சி மாவட்டம், திருவளர்ச்சோலையில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி கடன் சங்கத்தின் மூலம் கல்லனை அருகேயுள்ள கிளிகூடு, கொளத்தரசநல்லூர், உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை, திம்மராயசமுத்திரம், மேல கொண்டையம்பேட்டை,கீழ கொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை,  ஸ்ரீரங்கம், மேலூர் ஆகிய பகுதிகளுக்கு விவசாயக் கடன், நகைக் கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

   அதேபோல, வாங்கிய கடன்களை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் திருப்பிச் செலுத்துவதிலும் இந்த வங்கிதான் என திருச்சி மாவட்டத்தில் முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகிறது.

   இந்த வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மூன்று பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் பணிகளை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு பணியாற்றி வந்தனர்.

   இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு பணியாற்றிய 2 பேர்  ஓய்வு பெற்றனர். இதுவரை அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

   அதனால், ஒருவரே கடன் வழங்குவது, கடனைத் திருப்பி வசூலிப்பது, பதிவேடுகளைப் பராமரிப்பது, நகைகளைப் பாதுகாப்பது என அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறார்.

   இதனால், கூடுதல் பணிச் சுமையால் கடன் வழங்குவது, கடனை வசூலிப்பது உள்ளிட்ட பணிகளிலும் தாமதம் ஏற்படுகிறது.

மேலும், திடீரென உயர் அதிகாரிகள் திருச்சி அலுவலகத்திற்கு வரச் சொல்வதால், அந்த அலுவலரும் கடன் சங்கத்தை அவ்வப்போது பூட்டிச் செல்வதால், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

   இதுகுறித்து இந்தப் பகுதி விவசாயிகள் கூறியது:

   காவிரி நடுக்கரையில் இந்தப் பகுதி அமைந்துள்ளதால், தண்ணீர் வரும் முன்பே நெல், வாழை, கரும்பு விதைப்புப் பணிகளை விவசாயிகள் தொடங்கி விடுவர்.

நிகழாண்டும் இதேபோல, விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்குத் தேவையான உரங்கள், கடன்கள் அனைத்தையும் இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து பெற்று வருகிறோம்.

   தற்போது இங்கு ஒரு பணியாளர் மட்டுமே பணியாற்றி வருவதால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய விவசாயக் கடன், நகைக் கடன், மிகவும் தாமதமாகக் கிடைக்கின்றன.

சில நாள்களில் அலுவல் சம்பந்தப்பட்ட கூட்டம் என்று கூறி, சங்கத்தை பூட்டிச் சென்றுவிடுகிறார். இதனால், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

   தற்போதுகூட உரம்,  பூச்சிக்கொல்லி மருந்துகள் வந்துள்ளன. அவற்றை விநியோகம் செய்வதற்கு ரேஷன் கடை பணியாளர்களின் உதவியை வங்கி ஊழியர் நாடியிருந்தார்.

ஆனால், தற்போது ரேஷன் கடை பூட்டி கிடப்பதால் உரம் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com