டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

திருத்துறைப்பூண்டியில் அரசு கலைக் கல்லூரி அமைவது எப்போது?

திருத்துறைப்பூண்டி, மே 4: திருத்துறைப்பூண்டியில் அரசு கலைக் கல்லூரி அமையுமா என நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த இப் பகுதி மக்களுக்கு  தற்போது சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பும் ஏமாற்றத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:55 pm

ஏ. ரவி

திருத்துறைப்பூண்டி, மே 4: திருத்துறைப்பூண்டியில் அரசு கலைக் கல்லூரி அமையுமா என நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த இப் பகுதி மக்களுக்கு  தற்போது சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

   திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்ட பகுதியாகும். இங்கு பணப் பயிர் சாகுபடியோ, தொழில்சாலைகளோ கிடையாது.

   இப் பகுதியில் சிறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களுமே பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.

  இந்நிலையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளும், ஆலத்தம்பாடி, எடையூர், இடும்பவனம், தில்லைவிளாகம், உதயமாரத்தாண்டபுரம், முத்துப்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளும், இதைத் தவிர முத்துப்பேட்டையில் கோவிலூர் பெரியநாயகி அம்மன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும். 5 மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன.

    இந்தப் பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 2000 முதல் 2500 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உயர் கல்வியை தொடர வருகின்றனர். ஆனால், இந்த பகுதியில் அரசு கலைக் கல்லூரி  இல்லாததால், உயர் கல்வியை தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

    உயர் கல்வி பயில இந்தப் பகுதி மாணவர்கள் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரி, திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரிகளையே நாட வேண்டி உள்ளது. அப்படியே திருவாரூர், மன்னார்குடி அரசு கலைக் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும், விடுதி வசதி கிடைப்பது கடினம்.    தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் நன்கொடை மற்றும்  கூடுதல் கல்விக் கட்டணம் செலுத்தி கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத நிலையில், நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயர் கல்வி கனவு கானல் நீராகவே முடிந்துவிடுகிறது.

   மேலும், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தஞ்சையில் அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தாலும், 30 கி.மீ. தொலைவு வரை மட்டுமே அரசு போக்குவரத்துக் கழகங்களில்  கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. அதற்கு மேல் முழுக் கட்டணம் செலுத்தியே பயணம் செய்ய வேண்டி உள்ளது.

   திருத்துறைப்பூண்டியில் அரசுக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அரசியல்வாதிளின் நீண்ட நாள் வாக்குறுதி அப்படியே உள்ளது.

   கல்லூரித் தொடங்க வேண்டும் என இளைஞர் பெருமன்றம் சார்பில் ஒரு லட்சம் கையெழுத்து பெற்று முதல்வரிடம் அளித்தும் பலன் ஏதும் இல்லை.   சட்டப்பேரவையின் நிகழ் கூட்டத் தொடரில், கல்லூரி தொடங்க பல இடங்கள் தேர்வு செய்யப்பட்ட போதும், அதில் திருத்துறைப்பூண்டி இடம் பெறாதது இப் பகுதி மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.    எனவே, தமிழக முதல்வர் திருத்துறைப்பூண்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.