சாலை வசதி இல்லாத நரிக்குறவர்கள் காலனி

நீடாமங்கலம், நவ. 3: நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட காஞ்சான் திடல் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்புப் பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் அப் பகுதி மக்கள
Updated on
2 min read

நீடாமங்கலம், நவ. 3: நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட காஞ்சான் திடல் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்புப் பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் அப் பகுதி மக்கள்.

   திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்திற்கு பாசி, ஊசி மணி விற்பனைக்காக வந்த இவர்களில், தற்போது 26 குடும்பங்கள் நீடாமங்கலத்திலேயே தங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முதலில் தங்கி இருந்தது நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகப் பகுதிதான். இக் கூட்டத்தின் தலைவராக இருந்து மறைந்த வடிவேலுவின் முயற்சியின் காரணமாக, அப்போதைய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உமாசங்கர் நீடாமங்கலம் பேரூராட்சிப் பகுதியில் பழைய நீடாமங்கலம் பத்திர காளியம்மன் கோயில் அருகே அதாவது, நீடாமங்கலம் நகரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சான் திடல் என்ற பகுதியில் இவர்களுக்கு குடியிருப்பு மனைப் பட்டாக்களை வழங்கினார்.

   மனைப் பட்டாக்கள் வழங்கப்படும் முன்னர், நரிக்குறவர்கள் குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

   இதையடுத்து, இப் பகுதியõல் சொந்த வீடு கட்டி வசித்து வருகின்றனர். இங்கு இவர்களுக்கு மின்சாரம், குடிநீர்க் குழாய் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இப் பகுதிக்கு சாலை வசதி இல்லாதது நரிக்குறவர்களுக்கு ஒரு பெரும் குறையாகவே உள்ளது.

   இப் பகுதிக்கு சாலை அமைத்து தர வேண்டும் என இப் பகுதி பேரூராட்சி உறுப்பினர் ஜெருசலேம் ஜோசப் தீவிர முயற்சி மேற்கொண்டும், இதுவரை அதற்குப் பலன் எதுவும் கிடைக்கவில்லை. இவரின் தீவிர முயற்சியால்தான், நரிக்குறவர்களின்  குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.    தங்கள் பகுதிக்கு சாலை வசதி கோரி, இப் பகுதி மக்கள் நீடாமங்கலத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரிடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.     நீடாமங்கலம் நகரிலிருந்து அரை கி.மீ. தார்ச் சாலையில் நடந்து, பின்னர் அரை கி.மீ. தொலைவிற்கு வயல் வரப்புகளில் நடந்துதான் காஞ்சான் திடலை இப் பகுதி மக்கள் அடைய முடியும்.

   இரவு நேரங்களில் வயல்வெளியில் நடந்து செல்ல அஞ்சி, நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகப் பகுதியிலேயே தங்கி விடுவதும் உண்டு.

    வயலில் நடந்தால் பயிர்கள் வளர்ச்சி பாதிக்கப்படும் எனக் கூறி, வயலில் நடக்க விடாமல் விரட்டி அடித்த நிகழ்வுகளும் உண்டு என்று தெரிவிக்கின்றனர் நரிக்குறவர்கள்.  

   நீடாமங்கலம் பேரூராட்சி காஞ்சான் திடல் தெருக்களுக்கு மட்டும் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ள அரசு, இப் பகுதிக்குச் செல்ல சாலை அமைக்கவும்  நடவடிக்கை எடுப்பதன் மூலம் நரிக்குறவர்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அவர்களும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் வாய்ப்பு ஏற்படும்.

   எனவே, இப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காஞ்சான் திடலுக்கு சாலை வசதியை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com