பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அருங்காட்சியகம் மேம்படுத்தப்படுமா?

கரூர், நவ.9: கரூரில் மக்கள் பயன்பாடில்லாத அருங்காட்சியத்தைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.   மாவட்டங்களின் வரலாறு, புவியியல், இயற்கைச் சிறப்புகளை பொது

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:09 pm

எஸ்.​ முத்​துக்​கு​மார்

கரூர், நவ.9: கரூரில் மக்கள் பயன்பாடில்லாத அருங்காட்சியத்தைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  மாவட்டங்களின் வரலாறு, புவியியல், இயற்கைச் சிறப்புகளை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன.

  இதையொட்டி, கடந்த 26. 3. 2000-ல் கரூர் பேருந்து நிலைய மாடியில் அரசு அருங்காட்சியகத்தை அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மு. தமிழ்க்குடிமகன் திறந்துவைத்தார்.

  வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அருங்காட்சியகம், இடப் பற்றாக்குறையால், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பழைய திண்டுக்கல் சாலையில் இடம் மாறியது.

  அருங்காட்சியகத்தைப் பார்வையிட பொதுமக்கள் முதலில் இலவசமாக அனுமதிக்கப்பட்டு, தற்போது பெரியவர்களுக்கு ரூ.5-ம், சிறியவர்களுக்கு ரூ.3-ம், மாணவர்களுக்கு ரூ.2-ம், வெளிநாட்டவர்களுக்கு ரூ.100-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

  இங்கு பழங்காலத் தமிழ் எழுத்து வடிவங்கள், புதை படிவங்கள், தாவரப் புதைபடிவம், பண்டைய நாணயங்கள், சங்க கால இசைக் கருவிகள், சங்க காலப் பூக்கள், கல் ஆயுதங்கள், பூச்சி வகைகள், நட்சத்திர மீன்கள், கடல் பஞ்சுகள், விசிறிகள், உலோகப் பொருள்கள், சிலைகள், சிற்பங்கள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட ஏராளமான வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருள்கள் உள்ளன.

   ஆனால், இவற்றைப் பார்க்க பொதுமக்கள் அதிகளவில் வருவதில்லை. இதற்குக் காரணம் போதுமான பராமரிப்பின்மையே. அருங்காட்சியகம் அமைந்திருக்கும் இடம் குறித்து எந்த அறிவிப்புப் பலகையும் இல்லை. பாழடைந்த கட்டடத்தில் ஏதோ அலுவலகம் இயங்குகிறது என்பது மட்டுமே சிலருக்குத் தெரிந்திருக்கிறது.

  ஒரு காப்பாட்சியர், பகல், இரவு நேரக் காவலர்கள், மாதிரி அமைப்பு கலைஞர், தொழில்நுட்ப உதவியாளர் என்று 5 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் ஒரு காப்பாட்சியரும், ஒரு காவலர் மட்டுமே பணியில் உள்ளனர். அந்தக் காவலரும் பதிலிக் காவலராக உள்ளார்.

  இதனால், அருங்காட்சியகம் எந்த அலங்காரமுமின்றி, ஏனோதானோ என்று பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது. பாரமரிக்கவும், பாதுகாக்கவும், தகவல்களைத் தெரிவிக்கவும் ஆள்கள் இல்லாத காரணத்தால் அலுவலக வேலைகள் மட்டுமே நடைபெறுகின்றன.

  இதுகுறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் என். செüந்திரபாண்டியன் கூறியது:

  ஒரு மாவட்டத்தின் பெருமையை விளக்கும் அருங்காட்சியகங்கள், தற்போது கல்விப் பணியிலும் ஈடுபடுகின்றன. அருங்காட்சியகத்தில் மாதம் ஒரு சொற்பொழிவு நடத்தப்படுகிறது. நானும் பள்ளிகளுக்குச் சென்று பேசுகிறேன். அருங்காட்சியக இயக்குநரின் ஆணைப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு போட்டி நடத்தப்படுகிறது.

  அருங்காட்சியகப் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவது போதுமானதல்ல. பொருள்களை அலங்காரக் கண்ணாடிகளில் வைப்பது, அதன் வடிவமைப்புகளை மாற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்தத் தொகை போதுமானதல்ல. வழக்கமான மாதாந்திரச் செலவிற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.

  அருங்காட்சியகத்தின் வளர்ச்சிக்கு பொதுநல ஆர்வலர்களையும் எதிர்பார்த்துள்ளோம் என்றார் அவர்.

  இவ்வாறு பல அரிய பொக்கிஷங்களை உள்ளடக்கியுள்ள கரூர் அருங்காட்சியகத்தின் மூலம் மாவட்டத்தின் பெருமை, புவியியல் அமைப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்வது மாவட்டத்தையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ள வழிகோலும்.

  இதுகுறித்து பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.

  அத்துடன் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியும் இதைப் பார்வையிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், மாணவர்கள் வரலாற்றையும், பழம்பெருமையும் தெரிந்துகொள்வதோடு, அருங்காட்சியகத்திற்கும் வருமானம் கிடைக்கும்.

  எனவே, இவ்வாறான வரலாற்றுக் கூடங்களைக் காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.