இந்த இடத்தில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என, சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் பெற்றோர் - ஆசிரியர் கழகம், அனைத்து சேவைச் சங்கங்கள் கலந்து கொண்ட கூட்டத்திலும், நகர்மன்றத்திலும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதே இடத்தில் பெண்கள் பள்ளிக்கு 17 வகுப்பறைகள், ஆய்வகம், சுகாதார வளாகம் ஆகியவை அமைக்க நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டு, பணிகள் துவங்க இருந்தன. இந்த நிலையில், அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருத்துறைப்பூண்டி நகரில் இருந்து சுமார் 3.5 கி.மீ. தொலைவில் வயல் வெளியில் 6 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கி, அங்கு பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அந்த இடம் சாகுபடி நிலமாக இருந்ததாலும், மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் அபாயம் உள்ளதாலும், மாணவிகள் சென்று வருவது சிரமம் என்று கருதியும், நகரில் அரசு மருத்துவமனைக்கு அருகில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயன்றது நகராட்சி நிர்வாகம். ஆனால், நன்கொடையாளர் தானமாக அளித்த இடத்திற்கும், கையகப்படுத்த முயன்ற இடத்திற்கும் நிலமதிப்பில் வித்தியாசம் இருந்ததால், அறநிலையத் துறை பள்ளிக் கல்வித் துறைக்கு நிலத்தை அளிக்கவில்லை.