திருவெறும்பூர், அக்.1: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள பூலாங்குடி பகுதியில் போதிய குடிநீர் வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பழங்கனாங்குடி முதல்நிலை ஊராட்சியில் பழங்கனாங்குடி கிராமம், கம்பன் தெரு, நிலாமுத்துப்பட்டி, தேனேரிப்பட்டி, முன்னாள் ராணுவத்தினர் காலனி, அறவாக்குறிச்சிப்பட்டி, பூலாங்குடி கலப்பு காலனி, பூலாங்குடி பழைய கிராமம், நரிக்குறவர் காலனி, துப்பாக்கித் தொழில்சாலை குடியிருப்பு, எச்.ஏ.பி.பி. தொழில்சாலை குடியிருப்புகள் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் வருகின்றன.
2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சியின் மக்கள்தொகை 11,224. தற்போது சுமார் 17,000 பேர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதில், பூலாங்குடி காலனி, துப்பாக்கித் தொழில்சாலை குடியிருப்பு, எச்.ஏ.பி.பி. குடியிருப்பு, துப்பாக்கி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் ஊராட்சியின் சரிபாதிப் பேர் வசித்து வருகின்றனர்.
ஆனால், பூலாங்குடி காலனி, பூலாங்குடி கிராமம், பூலாங்குடி கலப்பு காலனி, பாரத்நகர், துப்பாக்கிநகர், இதைச் சுற்றிய சில பகுதிகளில் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த 1999-ல் தொடங்கப்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் ஒரு பகுதியாக 2007-2008 ஆம் ஆண்டில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நீருந்து நிலையம் பூலாங்குடி கலப்பு காலனி பகுதியில் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த நீருந்து நிலையத்தால் இந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.
அதாவது, பூலாங்குடி காலனி, பூலாங்குடி கிராமம், பூலாங்குடி கலப்பு காலனி, துப்பாக்கிநகர் உள்ளிட்டப் பகுதிகளுக்கு இந்தக் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. ஆனால், இந்தப் பகுதிகளை அடுத்துள்ள 43 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இதனால், போதிய குடிநீர் இன்றி அவதிப்படும் இந்தப் பகுதி மக்கள், 2 கி.மீ. தொலைவிலுள்ள துப்பாக்கித் தொழில்சாலை வளாகத்துக்குள்ளே சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர்.
மனிதாபிமான அடிப்படையில் துப்பாக்கித் தொழில்சாலை நிர்வாகமும் இதை அனுமதிக்கிறது.
இதேபோல, அஞ்சல் நிலையம், வங்கி, போதிய பேருந்து வசதி, சாலை வசதிகளும் இந்தப் பகுதியில் இல்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி நிர்வாகம் ஆகியோருக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியது:
பழங்கனாங்குடி ஊராட்சிக்குள்பட்ட பூலாங்குடி கிராமம், பூலாங்குடி காலனி, இதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு சுமார் 20 ஆண்டுகளாக போதிய குடிநீர் வசதி இல்லை. போதிய பேருந்து வசதிகள், சாலை வசதிகளும் இல்லை.
இந்தப் பகுதியில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் நீருந்து நிலையம் அமைக்கப்பட்ட போது, பிரச்னை தீரும் என்று நினைத்தோம். ஆனால், இந்தப் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தாமல், இதை அடுத்துள்ள கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், துப்பாக்கித் தொழில்சாலை வளாகத்துக்குள் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. அவர் இந்தப் பகுதிக்கே வருவதில்லை.
எனவே, பழங்கனாங்குடியிலிருந்து பூலாங்குடி பகுதிகளைப் பிரித்து, பூலாங்குடி கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்காவிடில், போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.