பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சுகாதாரம் காக்கப்படுமா?

கரூர், அக். 17:  கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.    கரூர் தாந்தோன்றிமலையில் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் உள்ளது. அலுவல் விஷயமாகவும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:34 pm

எஸ்.​ முத்​துக்​கு​மார்

கரூர், அக். 17:  கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

   கரூர் தாந்தோன்றிமலையில் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் உள்ளது. அலுவல் விஷயமாகவும், தங்களின் குறைகளை அரசு உயரதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்குவதற்காகவும் தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், பொதுமக்கள், அரசு அலுவலர்களுக்கான சுகாதார வசதிகளும், மற்ற வசதிகளும் அலுவலக வளாகத்தில் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

   3 வாசல்களைக் கொண்ட அலுவலகம் தற்போது 2 வாசல்களுடன் மட்டுமே இயங்கி வருகிறது. ஒரு வாசல் பாதுகாப்பு காரணமாக தேர்தல் நேரத்தில் மூடப்பட்டது. ஆனால், தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. அவசர விபத்து காலத்தில் பணியாளர்கள், பொதுமக்கள் விரைவில் வெளியேற வேண்டும் என்பதற்காகவே 3 வாசல்கள் அமைக்கப்பட்டன.

    இதையடுத்து, அலுவலகத்துக்குள் செல்லும் அனைவரும் எந்த அலுவலரைச் சந்திக்க செல்கிறார்கள் என்பதை பதிவு செய்ய 2 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த நடைமுறையும் தற்போது பெயரளவுக்கே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

   இதேபோல, அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதியும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. இதனால், ஆட்சியர், திட்ட இயக்குநர், வருவாய் அலுவலர் ஆகியோரது கார்களை நிறுத்திவைத்திருக்கும் இடத்தில், எச்சரிக்கை அறிவிப்பையும் மீறி ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

   சுகாதார வசதி மெச்சும் வகையில் இல்லாவிட்டாலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்குக்கூட இல்லை. 3 தளங்களைக் கொண்ட ஆட்சியர் அலுலவகத்தில் ஒவ்வொரு தளத்திலும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கழிவறைகள் பெரும்பாலும் சுகாதாரமற்ற முறையில், துர்நாற்றம் வீசும் நிலையிலேயே உள்ளன.

சில குழாய்களில் தண்ணீர் வருவதேயில்லை. சில குழாய்களில் வரும் தண்ணீரை நிறுத்த முடியாமல் தண்ணீர் வீணாகும் நிலையும் உள்ளது. அதிகாரிகளுக்கென தனியாக அமைக்கப்பட்ட கழிவறைகள் திறக்கப்படுவதேயில்லை.

   இதேபோல, மாவட்டக் கல்வி அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகங்கள் அமைந்துள்ள புதிய கட்டடத்தில் உள்ள கழிவறைகளை யார் பராமரிப்பது என்பதில் தகராறு உள்ளது. இதனால், சில கழிவறைகள் பூட்டப்பட்டு எந்தந் துறையினர் பராமரிக்கிறார்களோ அவர்களின் கட்டுப்பாட்டில் சாவி உள்ளது.

கழிவறையைப் பராமரிக்க ஊழியர்களிடம் தனியாக பணம் வசூலிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. இதனால், வேறு துறையினரோ, பொதுமக்களோ அந்தக் கழிவறைகளை எளிதில் பயன்படுத்த முடிவதில்லை.

   பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் பின்பகுதியில் ஒரு புதிய கழிவறை கட்டப்பட்டது. இந்தக் கழிவறையும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதனருகிலுள்ள பெண்கள் கழிவறை திறக்கப்படாமல் இருப்பதோடு, உள்ளே யாரும் செல்லாமல் இருப்பதற்காக முள்செடிகளைப் போட்டு கழிவறையை அடைத்துவைத்துள்ளனர். எனவே, கழிவறைக்குள் பொதுமக்கள் செல்லாமல் வளாகத்திலுள்ள புதர்களையும், மறைவிடங்களையும் நாடிச் செல்கின்றனர்.

   மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் அமைந்துள்ள இடத்திலேயே இதுபோன்ற குறைகள் உள்ளதோடு, பொதுமக்கள் குடிநீர்த் தேவைக்காக கடைகளையே நாடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆட்சியரகத்திலுள்ள ஒரு குழாயில் நல்ல தண்ணீர் வருகிறாதா அல்லது உப்புத் தண்ணீர் வருகிறதா என்ற தெரியாமலே பலர் குடிநீராகவும், சிலர் கை, கால் கழுவவும் பயன்படுத்தி வருகின்றனர்.

   2-வது தளத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான இயந்திரமும் வேலை செய்யாததால், அங்கேயும் ஏதோ தண்ணீர் கிடைக்கிறது என்ற நிலைதான் உள்ளது. இதனால், அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும், பொதுமக்களும் சுத்தமான குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது.

   மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சாப்பிடுவதெற்கென தனி அறை இல்லாததால் மதிய உணவு நேரத்தில் அவரவர்கள் மேஜைகளையும், அந்தந்த துறையில் காலியாக உள்ள இடங்களையும் பயன்படுத்துகின்றனர். சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவுவதற்கும் வெளியிலுள்ள குழாயையே நாட வேண்டியுள்ளது.

    இவ்வாறு பல்வேறு குறைபாடுகளுடன் திகழும் மாவட்ட ஆட்சியரகத்தின் குறைகள் தீர்த்து வைக்கப்படுமானால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும், ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.