திருவாரூர், அக். 29: திருவாரூர் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தெற்கு ரயில்வே சார்பில் அனைத்து முக்கிய வழித்தடங்களையும் அகல ரயில் பாதைகளாக மாற்றும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக திருச்சி - தஞ்சை, தஞ்சை - கும்பகோணம், கும்பகோணம் -மயிலாடுதுறை, தஞ்சை - திருவாரூர் - நாகூர் ஆகிய வழித்தடங்கள் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக, மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதைப் பணிகள் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் பணிகள் நிறைவு பெறாமல், ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இப் பாதையில் கடந்த ஆண்டில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே கோட்டத்தில் மிக நீளமான மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த மயிலாடுதுறை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதையில் முதல் கட்டமாக திருவாரூர் - மயிலாடுதுறை இடையே உள்ள 38 கி.மீ. பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கென | 120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ரயில் பாதையில் திருவாரூரை அடுத்து கொடிக்கால்பாளையம், விற்குடி, நன்னிலம், பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி, மங்கைநல்லூர் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் நன்னிலம், பேரளம் ரயில் நிலையங்கள் இரு ரயில்கள் நின்று மாறிச் செல்லக் கூடிய வசதியுடையவை. இந்தப் பாதையில் ஆறுகள், வாய்க்கால்களின் குறுக்காக பெரிய மற்றும் சிறிய அளவிலான ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டுமானப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஆனால், பணி தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் 50 சதப் பணிகள்கூட இதுவரை முடிவடையவில்லை. இதனால், திருவாரூர், நாகை மாவட்டங்களின் தெற்குப் பகுதியில் உள்ள பயணிகள் ரயிலில் சென்னை, பிற வட மாவட்டங்களுக்குச் செல்வதற்கு திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் கும்பகோணம், மயிலாடுதுறை வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பயண நேரமும், பண விரயமும் கூடுதலாகிறது என்கின்றனர் ரயில் பயணிகள். இப் பணிகள் முடிவடையாததால் சென்னையிலிருந்து நாகூர் வரை இயக்கப்படும் கம்பன் விரைவு ரயில் மயிலாடுதுறையிலிருந்து நேரடியாக திருவாரூர் வர வழியில்லாததால் கும்பகோணம், தஞ்சை வழியாக திருவாரூர் வந்து பின்னர் நாகப்பட்டினம் வழியாக நாகூர் சென்று, அதே மார்க்கத்தில் மீண்டும் சென்னைக்குச் செல்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச் செயலர் ஆர். ரமேஷ், அமைப்புச் செயலர் வீ. தர்மதாஸ் ஆகியோர் கூறியது:
திருவாரூர் - மயிலாடுதுறை இடையே ஏற்கெனவே பெங்களூர், சென்னைக்கு இரு விரைவு ரயில்கள் சென்று வந்தன. அதேபோல, மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு இரு ரயில்கள் சென்று வந்தன.
மேலும், திருச்சியிலிருந்து பகலில் சென்னைக்குச் செல்லும் சோழன் விரைவு ரயிலுக்கு திருவாரூரிலிருந்து இணைப்பு ரயில் ஒன்றும் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில்கள் தற்போது இல்லாததால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, திருவாரூர் - மயிலாடுதுறை இடையிலான அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடித்து, முன்பு இயக்கப்பட்டு வந்த அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

