லால்குடி பயணிகள் ரயில்கள் அரியலூர் வரை நீட்டிக்கப்படுமா?

அரியலூர், செப். 12: திருச்சியிலிருந்து லால்குடிக்கும், லால்குடியிலிருந்து திருச்சிக்கும் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்களை   அரியலூர் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள், அரசு  அலுவலர்கள், வியாபாரி
Updated on
2 min read

அரியலூர், செப். 12: திருச்சியிலிருந்து லால்குடிக்கும், லால்குடியிலிருந்து திருச்சிக்கும் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்களை   அரியலூர் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள், அரசு  அலுவலர்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும்  எதிர்பார்க்கின்றனர்.

    அரியலூர் மாவட்டம் என்றாலே சிமென்ட் ஆலைகளைத்தான் குறிப்பிட வேண்டும். டால்மியா, செட்டிநாடு, ஆதித்ய பிர்லா, ராம்கோ என சிமென்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த சிமென்ட் ஆலைகளில் இங்குள்ளவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

     பேருந்து, ரயில்களில் அரியலூர் வருபவர்கள் பெரும்  பாடுபட்டுத்தான் வந்து கொண்டிருக்கின்றனர். சென்னை செல்லும் வழித்தடத்தில் அரியலூர் ரயில் நிலையம் இருந்தாலும் மலைக்கோட்டை, பல்லவன், மங்களூர், குருவாயூர் போன்ற விரைவு ரயில்களும், கடலூர், விருத்தாசலம், விழுப்புரம்  செல்லும் பயணிகள் ரயில்களும் அரியலூரில் நின்று செல்கின்றன. அரியலூருக்கு என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு ரயில்கள் இயக்கப்படவில்லை.

     தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி, அரியலூர் வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் நிற்கக்கூட முடியாத நிலைதான் இருந்து வருகிறது. இதிலும் திருச்செந்தூர் விரைவு ரயில் போன்ற ரயில்கள்  அரியலூரிலும் நிற்பதில்லை. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும்தான் ரயில் பயணிகள் வந்து செல்கின்றனர்.

     வண்டி எண் 803 லால்குடி- திருச்சி பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர,  மற்ற நாள்களில் காலை 5.45 மணிக்கு லால்குடியிலிருந்து புறப்பட்டு, திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தை காலை 6.40 மணிக்குச் சென்றடைகிறது.

     வண்டி எண் 804 திருச்சியிலிருந்து மாலை 4.50 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.45 முதல் 5.50 மணிக்குள் லால்குடி ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

    இதன் பின்னர் இந்த ரயில் இயக்கப்படுவதில்லை. லால்குடி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்படுகிறது. திருச்சி ஜங்சன் ரயில்  நிலையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவுள்ள லால்குடிக்கு பயணிகள் ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ. 4 மட்டும்தான்.

    இதேபோல, சனிக்கிழமை மட்டும் வண்டி எண் 800 திருச்சியிலிருந்து முற்பகல் 11.55 மணிக்குப் புறப்பட்டு, லால்குடி வரை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. மேலும், மதுரையிலிருந்து விழுப்புரம் வரை செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் 702) காலை 6.20 மணிக்குத் திருச்சி வந்து காலை 6.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறது.

    விருத்தாசலத்திலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் 807) காலை 9 மணிக்குத் திருச்சி வந்தடைகிறது. இந்த ரயில் அரியலூருக்கு காலை 8 மணிக்குள் வந்தாலும் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

   வண்டி எண் 805 கடலூர்- திருச்சி பயணிகள் ரயில், வண்டி எண் 806 திருச்சி- கடலூர் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் நேரம் அலுவலகத்துக்குச் செல்பவர்களுக்கு, வேலைக்குச் செல்பவர்களுக்கு பொருந்தாத நேரமாக இருப்பதால்,  அந்த ரயில்கள் பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.

    திருச்சியிலிருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்படும் விருத்தாசலம் பயணிகள் ரயில் அரியலூரை வந்தடைய இரவு 8.15 மணி முதல் 8.30 மணி வரை ஆகிறது. 57 கி.மீ. தொலைவு என்றாலும் இடையில் வைகை, பல்லவன், பெங்களூர் விரைவு ரயில்களுக்காக இடைவழியில் நிறுத்துவதால் பயண நேரம் அதிகமாகிறது.

    எனவே, லால்குடியிலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண் 803) காலையில் திருச்சி சென்ற பிறகு மாலையில்தான் இயக்கப்படுகிறது. அதுவரை அங்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. பிறகு மாலையில் இயக்கப்படும் ரயில் (வண்டி எண் 804) லால்குடியில் இரவில் நிறுத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு இரு ரயில் நிலையங்களிலும் நிறுத்திவைக்கப்படும் பயணிகள் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்க வேண்டும். இங்கிருந்து இயங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் விரும்புகின்றனர். இதன்மூலம் பயண நேரம் குறைவதுடன், பயணக் கட்டணமும் குறையும்.

   அவசியம் தேவை: லால்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை அரியலூர் வரை கட்டாயமாக நீட்டிக்க வேண்டும். பேருந்துகளில் எப்போது பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பேருந்துகளில் அரியலூர் செல்லும் பயணிகளைத்தான் முதலில்  ஏற்றுகின்றனர். பிறகுதான் மற்ற ஊர்களுக்குச் செல்பவர்களை ஏற்றுகின்றனர்.

    இதனால், மற்ற ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். தற்போது லால்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்க வேண்டும். பேருந்துக் கட்டணத்தைக் காட்டிலும் ரயில் கட்டணம் குறைவு என்பதால், பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.  

   மேலும், லால்குடியை அடுத்துள்ள காட்டூர், டால்மியா, கல்லகம் கேட், சில்லக்குடி, அரியலூர் வரை வரும் பயணிகளுக்கு  மிகுந்த உதவியாக இருக்கும் என்கிறார் அரியலூர் மாவட்ட தேமுதிக செயலர் ராம. ஜயவேல்.

     ரயில் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்  பயணிகள் ரயில்களை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மக்களின் பயன்பாட்டுக்குரிய காலை, மாலை நேரங்களில்  அரியலூர் வரை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com